மோடி பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய 05 விடயங்கள்.
உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் நரேந்திர மோடி . பட்டி தொட்டி எங்கும் பலரது பேச்சும் இப்போது இந்த
நரேந்திர மோடி பற்றியே,
63 வயதான குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த இவர், இந்திய பாராளுமன்றத்தில் தன்னுடைய கன்னி பிரவேசத்தையே "பிரதமர்" என்ற உயரிய கெளரவத்துடனேயே ஆரம்பித்திருக்கின்றமை இன்னொரு சிறப்பம்சமாகும்.இவரது வாழ்க்கை, சாதிக்கத் துடிக்கின்ற இளைஞர்களுக்கு மிக முக்கியமான பாடங்கள் பலவற்றைக் கற்றுத் தருகின்றது.
01.எளிமையான ஆரம்பகாலம்
ஒரு தேநீர் சாலையின் உரிமையாளரின் மகனாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த மோடி பிற்கால அரசியலில் அவரது அரசியல் எதிரிகளால் "சாயா வாலா" (தேனீர் விற்பவர்) என்று கேலி செய்யப்பட்டிருந்தார். இந்தக்கேலியையே தனது அரசியல் வெற்றியின் முக்கியமான பலமாகப் பயன்படுத்திக்கொண்டார் மோடி.
தேநீர்ச் சாலைகளிலேயே, மோடியினதும் பாரதிய ஜனதாக்கட்சியினதும் பிரசாரங்கள் புதிய யுத்தியோடு ஆரம்பித்தன. வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக வீடியோ, இன்ரநெட், மொபைல் தொடர்புகளையும் பயன்படுத்தி தேநீர் கடைகளிலேயே தனது ஆரம்ப கட்ட பிரசாரங்களை மோடி முன்னெடுத்தார்.
அங்கு ஆரம்பித்த ஆளுமையான பிரசார உக்தி அதன் பின்னர் சமூக வலைத்தளங்களையும் மிகப்பரந்து பட்ட அளவில் பயன்படுத்துவதற்கு அந்த ஆரம்ப அடித்தளம் மோடியை கிண்டல் செய்தவைகளில் "சாயா வாலா" வார்த்தைகள் தான் .
எந்தவொரு மறைமுக விடயங்களையும் எங்கள் வாழ்வின் வெற்றிகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு இதுவொரு நல்ல உதாரணம்.
02. பழுத்த அரசியல்வாதி
17 வயதில் அவர்களது குல வழக்கப்படி விவாகம் செய்துகொண்ட மோடி (இந்த திருமண விவகாரம் அண்மைய தேர்தல் பிரசாரங்களின் போது தான் பலருக்கு தெரியவந்தது) ஒரு வருடத்திலேயே திருமண வாழ்வில் இருந்து விலகி இந்து சமய விவகாரங்களிலும் சமயத்தோடும் சார்ந்த இந்துத்துவ அரசியலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தினார்.
36 வது வயதிலேயே நெருக்கமான இந்துத்துவ இணைப்புக்களை கொண்ட பாரதிய ஜனதாக்கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். படிப்படியாக கட்சிக்குள்ளே தனது கடுமையான உழைப்பினால் முன்னேறிய மோடி 2001 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக முதற்தடவையாக தெரிவுசெய்ப்பட்டார்.
அன்றில் இருந்து ஒரு தடவைதானும் தோற்காமல் 3 தடவைகள் தொடர்ச்சியாக முதலமைச்சராகி மிக நீண்டகாலம் அம்மாநிலத்தின் சேவையாற்றும் மக்கள் சேவகன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத தலைவன் என்கின்ற அங்கீகாரம் கடந்த 13 ஆண்டுகள் மோடிக்கு இருந்தமையே மோடி பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. யினால் முன்மொழியப்பட காரணம் எனலாம்.LK அத்வானி போன்ற மூத்த தலைவர்களை பின்தள்ளி விட்டு இவர் பிரதமர் வேட்பாளராகி இன்று மகுடமும் சூடியிருக்கின்றார்.
03 சர்ச்சைகளின் நாயகன்
மோடிக்கும் சர்ச்சைகளுக்கும், மோடிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் குறைவே இருந்ததில்லை. குஜராத் வன்முறைகள், இந்து முஸ்லீம் கலவரங்கள் ஆகியவற்றில் மோடி நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார் என்று எதிர்க்கட்சிகள் எப்பொழுதுமே விமர்சித்து வந்திருக்கின்றன.
2002 ஆம் ஆண்டு மோடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் (இதில் அதிகமானவர்கள் முஸ்லீம்கள்) கொல்லப்பட்டபோது மோடி தனது ஆட்சி அதிகாரம் மூலம் அதை தடுத்து நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றுவரை மோடியை விமர்சிப்பவர்களால் மோடி மீது சுமத்தப்பட்டே இருக்கின்றது. ஆனால் மோடி எந்தக் குற்றங்களிலும் தனக்கு நேரடி தொடர்பு இல்லையென்றே மறுத்து வந்திருக்கிறார்.
ஆனால் ஊழல் குற்றங்கள் எதுவும் இல்லாதவர் என்பது கறைபடியாக் கரங்களின் சொந்தக்காரர் என்ற பெருமையையும் அளித்திருக்கிறது.
04. இந்தியாவின் அதிக நம்பிக்கையை வென்றவர்
குஜராத் மாநிலம் கடந்த 10 ஆண்டுகளில் கண்ட அபாரமான அபிவிருத்தியும் வளர்ச்சியும் இந்தியா முழுவதும் ஏற்படும் என்று இந்திய மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். திறந்த பொருளாதாரம் மீது அதிகமான நம்பிக்கை உடையவரான மோடி மிகப்பெரிய நிறுவனங்கள் பலவற்றை ஈர்த்து அவற்றை குஜராத்தில் பாரிய முதலீடுகளை செய்யவைத்திருக்கின்றார். இதேமாதிரி இந்தியாவிற்கும் மோடியினால் சர்வதேச நிறுவனங்கள் பலவற்றை அழைத்துவரும் நிலை கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகிறார்கள் .
மோடி தேர்தலில் வெற்றிபெற இந்தியாவின் பங்குச்சந்தையில் காணப்பட்ட ஆரோக்கியமான முன்னேற்றம் இதற்கான ஒரு சான்றாக கொள்ளலாம்.
05. மோடிக்கும் டெல்லிக்கும் இடையிலான தூரம்
பொதுவாகவே இந்தியப்பிரதமராக வருவோர் இந்தியத் தலைநகர் டெல்லியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ இருந்தவர்களாகவே இருந்திருப்பார்கள்.
மோடியைப் பொறுத்தவரையில் மாநிலத்தை தாண்டிய "தேசிய அரசியலில் ஈடுபட்டதில்லை" இந்த நாடாளுமன்ற தேர்தல் வரை இந்திய தேசிய அரசியலில் மோடி நேரடியாக ஈடுபட்டது கிடையாது.
டெல்லியில் சிறிது காலமும் வசிக்காமல் தன் சொந்த மாநிலத்தில் இருந்து பிரதமர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது அரசியல்வாதி நரேந்திர மோடி .
இதனால் தங்கள் மத்தியில் இருந்து ஒருவர் இந்தியாவை ஆள வந்திருக்கிறார் என்ற பரிவு பெரும்பாலான இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.இதேவேளை V.P.சிங், நரசிம்மராவ் ,தேவகவுடா ஆகியோரை தொடர்ந்து மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்த ஒருவர் நாட்டை ஆளும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இப்படி சாதித்திருக்கின்ற மோடி எதிர்வரும் 26ந் தேதி மாலை 6.00 மணியளவில் தான் பிரதமராக பதவியேற்க உள்ளதாக இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மனிதனது சாதனை வெற்றிகளுக்கு பின்னும் மறைந்திருக்கும் நல்ல விடயங்களை தேடி பார்ப்போம்,முடியுமாயின் நாமும் ஒரு முறை முயன்று பார்ப்போம்.நரேந்திர மோடி போன்று நாட்டை ஆளும் வல்லமை பெறாவிடினும் வெற்றிகளை தேடி செல்லும் நிலைகடந்து ,வெற்றிகள் எங்களையும் தேடி வரும் நிலைக்கு நாமும் வருவோம் என்று நம்பிக்கை கொள்வோம்.
நமோ (நரேந்திர மோடி என்பதன் சுருக்கம்) என்பதையே இந்தியா இப்போது மந்திரமாகப் பார்க்கிறது.
நாம் நம்பிக்கையையே வாழ்க்கையின் தாரக மந்திரமாகக் கொள்வோம்.