2014 - சனிப் பெயர்ச்சி பலன்கள் சூரியனுக்காக கணித்தவர் - தெஹிவளை வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் 'விஷ்ணு சாகரம்' - சத்திய நாராயண குருக்கள்.
1.மேஷ ராசி நண்பர்களே.

உங்கள் ராசிக்கு 7 ல் இருந்து சனி இதுவரை குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளை கொடுத்திருப்பார். கருத்து வேறுபாடு காரணமாக சில நேரங்களில் குடும்பம் பிரிந்திருக்கலாம். தீயோர் சேர்க்கை உங்களை அவப்பெயருக்கு உள்ளாக்கியிருக்கும். இதனால் பணவிரயம் ஏற்பட்டிருக்கும். இப்படி கெடு பலன்களைத் தந்த சனி இப்போது 8 ம் இடத்திற்கு சென்றுள்ளார்.
அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மைதர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்களிடையே மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும். இவையெல்லாம் அஷ்டமத்தில் சனியின் பொதுவான பலன்கள் தான். ஆனால் இந்த கேடு பலன்கள் இப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் கோச்சார பலன்களைப் பார்க்கும் போது, சக்தி கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் இப்போது குரு பகவான் 4ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது, பொதுவாக குரு பகவான் 4 ல் இருக்கும் போது, மன உளைச்சல், உறவினர்களின் வீண் பகை என்பவற்றை உருவாக்குவார். ராகு தற்போது 6 ம் இடமான கன்னி ராசியில் இருக்கின்றார். இதனால் நன்மை கிடைக்கும், குடும்பத்தில் இருக்கின்ற குழப்பங்கள் வெகுவாக குறையும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வார். முயற்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். காரியத்தில் வெற்றியை காணலாம். பகைவரின் சதியை முறியடிக்கும் திறனை பெறுவீர்கள்.
உங்கள் ஆற்றல் மேம்படும்.
பரிகாரம்
சந்தர்ப்பம் கிடைக்கும் போது, நவக்கிரகங்களைச் சுற்றி வாருங்கள். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தை தரும். சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வசதி படைத்தவர்கள், ஆடை வழங்கி உதவி செய்யுங்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்குங்கள். மேலும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். சன்னியாசிகளுக்கு உதவி செய்யுங்கள். காக்கைகளுக்கு அன்னமிடுங்கள்.
2.ரிஷப ராசி அன்பர்களே

இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6 ம் இடமான துலாமில் இருந்து. பல்வேறு நன்மைகளைத் தந்தார். குறிப்பாக நல்ல பணப்புளக்கத்தையும், பிடித்த காரியத்தில் வெற்றியையும் கொடுத்திருப்பார். மேலும் உங்களுக்கு அபார ஆற்றலைத் தந்திருப்பார். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் மாற்றியிருப்பார். உடல்நலத்தையும் சிறப்பாக பாதுகாத்திருப்பார். இந்த நிலையில் சனிபகவான் 7 ம் இடமாக விருச்சிகத்துக்கு செல்கின்றான். இது சிறப்பான இடமல்ல. அவரால் முன்பு போல நற்பலனைத் தர முடியாது. பொதுவாக சனி இந்த இடத்திலிருக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். அலைச்சல் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம் என்பது பொதுவான பலன்கள். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமான நிலையில் இல்லாவிட்டாலும், ஏனைய கிரகங்கள் அவ்வப்போது நன்மை தருவார்கள். கோச்சார பலனைக் கணக்கிடும் போது மற்றைய கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொண்டு கணிக்க வேண்டும் அந்த வகையில் முக்கிய கிரகங்களான குரு, ராகு, கேது ஆகியோரின் நிலை பொதுவாகும். குருபகவான் 3 ம் இடத்தில் உள்ளார். பொதுவாக குரு 3 ம் இடத்தில் இருக்கும் போது முயற்சிகளில் தடை ஏற்படும். பணி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். தற்போது ராகு 5 ம் நிலையான கன்னியிலுள்ளார். 5 ம் இடமாக அங்கு அவரால் நன்மை தர இயலாது. அதானால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
பரிகாரம்.
பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள். குரு பகவான் சாதகமாக இல்லை என்பதால், அவருக்கு அர்ச்சனை செய்யலாம். முல்லை மலர் மாலை அணிவித்து வணங்குங்கள். ஊனமுற்றோருக்கு ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைத் தரும்.
3.மிதுன ராசி அன்பர்களுக்கு

இதுவரை உங்கள் ராசிக்கு சனி பகவான் 5ம் இடத்திலிருந்து 6 ம் இடத்திலுள்ள விருச்சக ராசிக்கு சென்றுள்ளார். அவர் 5 ல் இருக்கும் போது பல்வேறு இடையூறுகளைத் தந்திருப்பார். குறிப்பாக குடும்பங்களில் பிரச்சினைகளைத் தந்திருப்பார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவியிடையே பிரிவு ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில்தான் சனிபகவான் துலாம் ராசிக்கு அடி எடுத்து வைக்கின்றார். இங்கு நல்ல பணப்புழக்கத்தையும் காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். மேலும் சனி 10 ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும் காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார். கோச்சார பலனைக் கணக்கிடும் போது மற்றைய கிரகங்களையும் கவனித்தில் கொண்டு கணிக்க வேண்டும். அந்த வகையில் முக்கிய கிரகங்களான குரு, ராகு, கேது. இப்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 2 ம் இடத்தில் இருக்கின்றார். உங்கள் ஆற்றல் மேம்படும். உங்கள் மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். ராகு தற்போது கன்னி ராசியில் இருக்கின்றார். இங்கு அவரால் நன்மை தர இயலாது தோள் உபாதையைத் தரலாம். வீட்டில் பொருள்கள் களவு போக வாய்ப்புண்டு.
பரிகாரம்
ராகு, கேது அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். பௌர்ணமி நாளில் வீட்டில் விளக்கேற்றி சித்திரபத்த நாயனாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள்.
4.கடக ராசி அன்பர்களே

இதுவரை சனிபகவான் 4 ம் இடத்திலிருந்து வெவ்வேறு பிரச்சினைகளை தந்திருப்பார். உங்களை பல வழிகளில் அலைக்கழித்திருப்பார். தாயின் உடல் நலம் பாதிப்படைந்து உங்களைக் கவலைக்குள்ளாக்கியிருக்கும். இந்த நிலையில் சனிப்பெயர்சி இடம்பெறுகின்றது. சனி பகவான் 5 ம் இடத்திற்கு மாறுவது போல இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் 4 ம் இடத்திலிருந்ததை போன்று பின்தங்கிய பலன்களை தர மாட்டார். 5 ம் இடத்தில் சனி இருக்கும் போது குடும்பத்தில் சிற்சில சிக்கல்கள் ஏற்படும். அவர் திருப்தியற்ற நிலையிலிருந்தாலும், அவரின் 7 ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும். அதே நேரம் மற்றைய கிரகங்களாக இருந்தாலும் நன்மைகள் கிடைக்கும்.
பரிகாரம்
வியாழக்கிழமை தட்சணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். தற்போது கொண்டை கடலை வாங்கி தானம் செய்யலாம். சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணைத் தீபம் ஏற்றுங்கள். துர்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும். கேதுவுக்கு நீல நிற வஸ்திரத்தால் சாற்றி அர்ச்சனை செய்யுங்கள். இது நன்மை தரும்.
5.சிம்ம ராசி அன்பர்களுக்கு.

இதுவரை சனிபகவான் 3ம் இடத்திலிருந்து பல்வேறுபட்ட நன்மைகளைத் தந்தார். குறிப்பாக பொதுவாக பொருளாதார வளர்ச்சியைத் தந்திருப்பார். முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றிருப்பார். இந்த நிலையில் சனி பகவான் 4 ல் அடியெடுத்து வைக்கிறார். இந்த நிலை அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4 ம் இடத்தில் இருக்கும் போது சனிபகவான் குடும்பத்தில் வீண் கஷ்டத்தைக் கொடுப்பார்.ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும்.தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். இவையெல்லாம் பொதுவான பலன்கள். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும். அவரது 3 ம் இடத்துப் பார்வை மிக சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிகவும் சாதகமான நிலை.
பரிகாரம்.
பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி பூஜை செய்யவும். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது நவக்கிரகங்களைச் சுற்றி வலம் வாருங்கள். பாம்பு புற்றுக்குப் பால் ஊற்றலாம். வியாழக்கிழமை தட்சனாமூர்த்திக்கு மஞ்சள் மாலை அணிவித்து வழிபடுங்கள். ஆஞ்சநேயரை வழிபடுங்கள். ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள்.
6.கன்னி ராசி அன்பர்களே

இது உங்களுக்கு மிக சிறப்பான காலம். ஏழரை சனி பிடியிலிருந்து பூரணமாக விடுபட்டுவிட்டீர்கள். சனி பெயர்ச்சி பல்வேறு முன்னேற்றங்களைத் தரவுள்ளது. ஏழரை சனி காலத்தில் பட்ட துன்பங்கள் கணக்கிலடங்காது. தொட்டதெல்லாம் தோல்வியின் நிலையே ஏற்பட்டிருக்கும். குடும்பத்தில் பல்வேறுபட்ட பிரச்சினையிருந்திருக்கும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்தே சென்றிருப்பார்கள். வீட்டில் அடிக்கடி பொருட்கள் கூட களவு போயிருக்கும். இந்த நிலையில் இப்போது சனி பகவான் 3 ம் இடத்திற்கு மாறியுள்ளார். இது உன்னத நிலை. அவர் உங்கள் முயற்சி'கள் அனைத்தையும் வெற்றியடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்து ஓங்கச் செய்வார். குரு பகவான் இப்போது 11ம் இடத்தில் இருப்பதனால். இது உங்களுக்கு உன்னதமான நிலை.
பரிகாரம்.
கேதுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள். ராகுக்கு அர்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோயிலுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு சிறந்த உயர்வைத்தரும். ராகு காலத்தில் வைரவருக்கும் தயிர்சாதம் படைத்து வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சனாமூர்த்தியை வழிபடுங்கள்.
7.துலா ராசி அன்பர்களுக்கு.

உங்களுக்கு சனி பகவான் கடந்த சில ஆண்டுகளாக அளவுக்கு அதிகமான சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தந்திருப்பார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் உங்களுக்கு அலைச்சலை ஏற்படுத்தியிருப்பார். வேலைப்பழு அதிகமாக இருந்திருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு இருந்திருக்காது. தொல்லைகளே மிஞ்சிருக்கும். உங்களின் உதவியை நாடி வந்திருப்பார்களே தவிர உங்களுக்கு உதவி ஏதும் செய்திருக்க மாட்டார்கள். வீண் அலைச்சல் உங்களுக்கு மனச் சோர்வைத் தந்திருக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பீர்கள். இந்த நிலையில் சனி பகவான் 2ம் நிலைக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடமல்ல. ஆனால் மேலே சொன்ன போக்கான பலன்கள் இனி நடக்காது. ஏழரைச்சனி காலம் இன்னும் இரண்டரை ஆண்டு காலம் தொடரும். சனி 2 ம் இடத்திலிருக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார். பொருளாதார இழப்புகள் ஏற்படும். களவு கொடுக்க நேரிடும். இது பொதுவான விதி. ஆனால் மற்றைய கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்தால் . கடந்த இரண்டரை ஆண்டு காலம் கொடுமையாக அமையாது. காரணம் இது ஏழரை சனியின் இறுதிக்கட்டம் இந்த காலகட்டத்தில் சனி அதிக பலனைக் கொடுத்தாலும். அதற்கான பலனையும் தர தயங்கமாட்டார். மேலும் சனி பகவான் இந்த இடத்திலிருந்து 3 ம், 10 ம் இடங்களைப் பார்பார். அவரது 10 ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கும். இதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமை சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை சிவன் கோயிலுக்கு சென்று வாருங்கள். தட்சனாமூர்த்தியை கொண்டை கடலை படைத்து வணங்குங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், சிறுவர்களுக்கும் உதவி செய்யுங்கள்.
8.விருச்சிக ராசி அன்பர்களே.

உங்களுக்கு சனி பகவான் நல்லது தரும் காலம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே சனிபகவானால் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். குறிப்பாக. பொருள் நாசம். வீண் அலைச்சல், காரிய கைகூடாமை, மன உளைச்சல் போன்ற இன்னல்களை கண்டிருக்கலாம். இப்போது சனி பகவான் 12 ம் இடத்திற்கு வருகிறார். இது சனியின் உச்சக்கட்டம். இதற்காக கவலைகொள்ள வேண்டாம். பொதுவாக சனி உங்கள் ராசியில் இருக்கும் இரண்டரை ஆண்டு காலம். உடல் பாதிக்கப்படலாம். உறவினர்கள் மத்தியில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது. இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். மற்ற கிரகங்களால் நன்மைக் கிடைக்கும். சனி பகவான் நிற்கும் இடத்திலிருந்து 3ம், 7ம், 10ம் இடங்களைப் பார்ப்பார். அந்த வகையில் அவரது 3 ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும் ஏற்படுத்துவார். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் வளர்ச்சியும் தருவார்.
பரிகாரம்.
சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். விநாயகரையும், ஆஞ்சநேயரையும் தொடர்ந்து வணங்கி வாருங்கள். ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் உதவி செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள்.
9.தனுசு ராசி அன்பர்களே

சனி பகவான் இதுவரை 11ம் இடத்திலிருந்து பல்வேறு நன்மைகள் தந்தார். செய்தொழில் மூலம் சிறப்பாக வருமானம் பெற்றிருக்கலாம். வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருந்திருக்கும். பொன் பொருள் என வாங்கியிருப்பீர்கள். இப்போது சனி பகவான் 12ம் இடமான விருச்சக ராசிக்கு செல்கிறார். இனிமேல் அவரால் முன்பு போல நன்மைகளை எதிர்ப்பார்க்க முடியாது. இது உங்களுக்கு ஏழரை சனியின் ஆரம்ப காலம். சனி 12ம் இடத்திலிருக்கும் போது பொருளாதார இழப்பு ஏற்படும். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும். சனியின் 7ம் இடத்துப் பார்வை ரிஷபத்தில் விழுவதால், அவர் நல்ல பொருளாதார வளர்ச்சியைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்க்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். இதுதவிர மேலும் மற்றைய கிரகங்களான குருவும் ராகுவும் அவ்வப்போது நன்மைகளைத் தருவார். விரைவாக செல்லும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்களினாலும். நன்மை கிட்டும். அந்த வகையில் மற்ற கிரகங்களை விட உங்களுக்கு நல்ல காலம் உண்டு.
பரிகாரம்.
பத்திரகாளி அம்மனுக்கு விளக்கேற்றுங்கள். வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று வாருங்கள். சனி பகவானுக்க அர்ச்சனை செய்யுங்கள். உங்களுக்கு ஆஞ்சனேய வழிபாடு உறுதுணையாக இருக்கும்.
10.மகர ராசி அன்பர்களே

கடந்த பல ஆண்டுகளாக சனி பகவான் குறிப்பாக பல இன்னல்னளைத் தந்திருப்பார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக உடல்நிலை உபாதைகளும். தொழில் மந்த நிலையும். உங்களுக்கு கொடுத்திருப்பார். உங்கள் செல்வாக்கு கௌரவம் போன்றவற்றிற்கு பங்கம் வந்திருக்கும். உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்காது. ஆனாலும் கடந்த சில வாரங்களாக குரு பகவானும் கேதுவும் நன்மை தந்து உங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் தான் சனி பகவான் இப்போது 12ம் இடத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம்.அவரால் பொன் பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். இது உங்களுக்கு சிறந்த காலம். படிப்படியாக முன்னேற்றம் காணும் காலம்.
பரிகாரம்.
சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். வியாழக்கிழமை தட்சணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வைரவர் வழிபாடு சிறப்பைத்தரும்.
11.கும்ப ராசி அன்பர்களே

இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 9வது இடத்திலிருந்தார். அவர் முயற்சிகளில் பல்வேறு தோல்விகளைத் தந்திருப்பார். பகைவர்களால் தொல்லைகள் ஏற்பட்டிருக்கும். சிலர் எதிரிகளுக்கு அடங்கிப் போயிருப்பார்கள். உறவினர்கள் நண்பர்களிடம் மனத்துவேசம் உருவாகி அது பகையாக மாறியிருக்கலாம். இந்த நிலையில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10ம் இடத்திற்கு வருகிறார். அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலன்கள் மாறுபடும். சனியால் இதுவரை இருந்துவந்த தடைகள் அகலும் ஆனால் தொழில்களில் சில சில பின்னடைவுகள் ஏற்படும். உங்கள் செல்வாக்கு முன்போல இல்லாமல் போகலாம். இதுதவிர சனி 10ம் இடத்திலிருக்கும் போது பொதுவான பலன்களைத் தரும். இதைக்கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். வேறு கிரகங்கள் நன்மை தர காத்திருக்கின்றன. முக்கிய கிரகங்களான குரு, ராகு ஆகியவற்றின் நிலையால் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்.
குரு பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். பத்திரகாளி அம்மனை தொடர்ந்து வணங்கி வந்தால் தடைகள் அகலும். ஞானிகளை சந்தித்து காணிக்கை கொடுத்து ஆசிபெறுங்கள்.
12.மீன ராசி நண்பர்களே

இதுவரையில் சனிபகவான் அஷ்டம் எனும் இடத்தில் 8 ம் இடத்திலிருந்து பல கஷ்டங்களைத் தந்திருப்பான். குறிப்பாக குடும்பத்தில் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு வந்திருக்கலாம் .அவர்களிடையே விரிசல் ஏற்பட்டு விரிசல் நிலை வந்திருக்கும். உறவினர்கள் பகையில் மனக்கசப்பு உருவாகியிருக்கும். உங்கள் முயற்சிகளில் தடை வந்து நீங்கள் நினைத்தது செய்ய முடியாது போயிருக்கும். சனி இந்த பிரச்சினையோடு மட்டும் இருந்திருக்காது. கடந்த சில காலங்களாக முக்கிய கிரகங்களும் இந்த நிலமையில் தான் இருந்திருக்கும். இந்த நிலையில் சனிபகவான் 09 ஆம் இடமான விருட்சிக ராசிக்கு வந்துள்ளான். மிகவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் இதற்கு முன்பு போல கொடுமை நிலைக்கு விடமாட்டார். பொதுவாக சனி 09 ம் இடத்தில் இருக்கும் போது உங்கள் முயற்சிகள் தடைப்படலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுபட்டு போகும் நிலை உருவாகும் என்று சோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கெடுபலன்கள் அப்படியே நிலவும் என்று எண்ண வேண்டாம். கோச்சார பலனை கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையினையும் கருத்தில் கொள்ள வேண்டும்
அந்த நிலையில் அவ்வப்போது நன்மை கிடைக்கும்.
சனிபகவான் சாகதமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தாம் இருக்கும் நிலையில் இருந்து 3ம், 7ம் , 10ம் இடங்களை பார்ப்பார். அந்த 03 பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. எனவே சனிப்பெயர்ச்சி காலம் சிறப்பானதாக அமைகிறது.
பரிகாரம்
பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள். குரு பகவான் சாதகமாக இல்லையென்பதால் அவருக்கு அர்ச்சனை செய்யலாம். மலர்மாலை அணிவித்து வணங்குங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஆஞ்சநேயரை வணங்குங்கள். மேலும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள் அது உங்கள் வாழ்க்கைக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.