126 Views
டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்ட 72ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் , தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித்தந்துள்ளது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற 'அமரன்' திரைப்படம். இந்தத் திரைப்படம் மொத்தம் 3 முக்கிய பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
அந்தவகையில், சிறந்த இயக்குநர்,
சிறந்த பின்னணி இசை,
சிறந்த படத்தொகுப்பு ஆகிய விருதுகளை தன்வசப்படுத்தியுள்ளது அமரன் திரைப்படம்.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது X பக்கத்தில் படக்குழுவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
'அமரன் குடும்பத்திற்கே இது ஒரு மிகச்சிறந்த நாளாக அமைந்துள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருது பெற்ற ராஜ்குமார் பெரியசாமிக்கும், சிறந்த பின்னணி இசைக்காக விருது வென்ற ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும், சிறந்த படத்தொகுப்புக்கான விருது பெற்றுள்ள ஆர். கலைவண்ணனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்'.
மேலும், இதே தேசிய விருதுகள் பட்டியலில் விருதுகளை வென்று குவித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், அனல் அரசு, அருண் மாதேஸ்வரன், சுரேன் ஜி, சச்சனா, ஹரிஹரசுதன், எட்மண்ட்ரான்சன் ஆகியோருக்கும் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் ஏற்கனவே கொண்டாடப்பட்ட 'அமரன்' திரைப்படம், தற்போது தேசிய அளவிலும் இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதால் திரைப்படக்குழுவினரும் தமிழ் சினிமா இரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.