தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் சார்ஜர்களை வெளியே கொண்டு செல்லும் போது மழையில் நனைவது, தற்செயலாக தண்ணீர் படுவது போன்றவை நடக்கலாம்.
அவ்வாறான நேரத்தில், அவசரத்தில் எடுக்கும் தவறான முடிவு, சார்ஜரை மொத்தமாக வீணாக்கிவிடும். உங்கள் சார்ஜர் ஈரமானால் இந்தத் தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்.
அநேகமானோர் சார்ஜர் தண்ணீரில் விழுந்ததும், அது வேலை செய்கிறதா என்று பார்க்க உடனே அதனை மின்சுற்றுடன் பொருத்தி பார்ப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. சார்ஜருக்குள் ஈரம் இருந்தால் மின்கசிவு ஏற்படும்.
சார்ஜர் ஈரமாக இருக்கும்போது, அதை வைத்து தொலைபேசிக்கு சார்ஜ் போட முயற்சிக்காதீர்கள். அப்படிச் செய்தால், சார்ஜர் மட்டுமல்ல, தொலைபேசியின் சார்ஜிங் போர்ட் மற்றும் மின்கலம் சேதமடையலாம். இதனால், பழுதுபார்க்கும் செலவு அதிகமாகும்.
சார்ஜரை பல மணி நேரம் நேரடி வெயிலில் வைப்பது நல்லதல்ல. அதிகப்படியான வெப்பம் அதன் வயரிங், இன்சுலேஷன் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களை சேதப்படுத்தும். சுத்தமான, உலர்ந்த மற்றும் நன்கு காற்றோட்டமான இடத்தில் வைத்து உலர விடுங்கள்.
ஹேர் டிரையரை பயன்படுத்தி உலர்த்த முயற்சிக்கும் போதும் வெப்பத்தால் பாதிப்பு ஏற்படும். நன்றாக உலர்த்திய பிறகும், சார்ஜரில் இருந்து தீப்பொறி வந்தாலோ அல்லது அது அதிக சூடானாலோ, அதைப் பயன்படுத்த வேண்டாம். அத்தகைய சார்ஜரைப் பயன்படுத்துவது ஆபத்தானது.