நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து வருகின்றது.
வெளியான நாள் முதல் இரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வரும் இத்திரைப்படம், வணிக ரீதியில் விஷ்ணு விஷாலின் சினிமா வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக, இரண்டாவது வாரத்திலும் பெரும்பாலான திரையரங்குகளில் காட்சிகள் முழுமையாகப் பதிவாகி (Housefull) ஓடிக்கொண்டிருப்பதுடன், உலகளவில் திரையிடப்படும் திரைகளின் எண்ணிக்கை 700 க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் இதுவரை இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ள ‘கட்டா குஸ்தி 2’, இதற்கு முன்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைப் பெற்றிருந்த ‘ராட்சசன்’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.