இன்றைய காலகட்டத்தில் Smartphone அன்றாட வாழ்வின் இன்றியமையாத அங்கமாகிவிட்ட போதிலும், பல மாதங்களாக அவற்றை ‘ரீஸ்டார்ட்’ (Restart) செய்யாமல் பயன்படுத்துவோர் பலருண்டு. அவ்வாறு தொடர்ந்து ஒரு வருடமாக தொலைபேசியை Restart செய்யாமல் இயக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடர்ச்சியான பயன்பாட்டினால் செயலிகளின் தற்காலிகத் தரவுகள் (Cache data) மற்றும் வேண்டாத கோப்புகள் (Temporary files) சேர்ந்து, போனின் தற்காலிக நினைவகத்தின் (RAM) மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் போனின் வேகம் குறைவடைவதுடன், செயலிகள் திடீரென முடங்குதல் (Hang), இயங்க மறுத்தல் போன்ற சிக்கல்களும் தோன்றும்.
மேலும், பின்னணியில் தொடர்ச்சியாக இயங்கும் செயலிகளால் போன் அதிகளவில் சூடாகி, மின்கலத்தின் (Battery) ஆயுள் வேகமாகக் குறைவடையும்.
சில ஆபத்தான தீம்பொருள்கள் (Malware) தொலைபேசியின் தற்காலிக நினைவகத்தில் (RAM) தங்கியிருந்து செயற்படக்கூடியவை. Restart செய்யும்போது இந்த நினைவகம் முற்றாக அழிக்கப்படுவதால், அத்தகைய தீம்பொருள்களின் தொழிற்பாடும் செயலிழந்துபோகும்.
எனவே, தொலைபேசியின் ஆயுளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த, வாரத்திற்கு ஒருமுறையாவது போனை Restart செய்வது அவசியமென அறிவுறுத்தப்படுகின்றது.