வம்சம், மெளனகுரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணியும் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பில் இரண்டு படங்கள் இம்மாதம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அருள்நிதி நடித்த காமெடி திரைப்படமான 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' என்ற திரைப்படம் இம்மாதம் 15ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இதே நாளில் ஜோதிகாவின் '36 வயதினிலே' மற்றும் ஆர்யாவின் 'புறம்போக்கு எனும் பொதுவுடமை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அருள்நிதி நடித்த திகில் படமான 'டிமாண்டி காலனி' திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் கதைக்கு, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அவரிடம் உதவியாளராக இருந்த அஜய் ஞானமுத்து. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மே மாதம் 22 அல்லது 29ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.
எனவே, இரண்டு படங்களும் அடுத்தடுத்து வந்து அருநிதிக்கு அட்டகாச வரவேற்பை வழங்கவுள்ளது என்பது பலரின் எதிர்பார்ப்பாகும். நாமும் காத்திருப்போம்.
-கோடம்பாக்கக் குருவி-