வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் உருவான 'மாஸ் என்கிற மாசிலாமணி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்று கொச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சூர்யா, விரைவில் ஜோதிகாவுடன் தான் திரையில் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்தில் சூர்யா, இரண்டு மலையாளப்படங்களை பார்த்ததாகவும், அந்த இரண்டு படங்களில் ஒன்றினை ரீமேக் செய்யும் ஐடியா இருப்பதாகவும், அந்த படத்தில் தான் மீண்டும் ஜோதிகாவுடன் ஜோடி சேர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சூர்யா பார்த்த இரண்டு மலையாள திரைப்படங்கள் சித்தார்த் பரத் இயக்கிய சண்ட்ரேட்டன் எவிடியா (Chandrettan Evideya) மற்றும் பிரஜ்ஜீத் இயக்கிய ஒரு வடக்கன் செல்பி ஆகிய திரைப்படங்கள் ஆகும்.
இந்த இரண்டு படங்களின் ஒன்றின் ரீமேக்கில்தான் சூர்யா-ஜோதிகா மீண்டும் ஜோடி சேரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக இந்த ஜோடி Chandrettan Evideya என்ற படத்தைத்தான் தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. திலீப், அனுஸ்ரீ, நமீதா பிரமோத் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் திலீப் மற்றும் அனுஸ்ரீ கணவன், மனைவியாக நடித்துள்ளனர். இந்த படத்தில் இருவருமே அரசு ஊழியர்களாக நடித்துள்ளனர். இவர்களுடைய வாழ்க்கை சுபமாக சென்று கொண்டிருந்தபோது ஒருநாள் தஞ்சாவூர் சென்று ஒரு ஜோதிடரை பார்க்கின்றனர். அந்த ஜோதிடர் கூறிய ஒரு விஷயம் இருவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய திருப்பம்தான் கதை. தற்போதைய சூழ்நிலையில் சூர்யா-ஜோதிகாவுக்கு இந்த படம் பொருத்தமாக இருக்கும் என்றும், இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய சித்தார்த் பரத்தே இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
-கோடம்பாக்கக் குருவி-