18,236 Views
கொடதெனியாவயில் கொலைசெய்யப்பட்ட சிறுமியின் படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பகிர்வது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைஎச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலைக் காட்டும் வகையான படங்கள் மற்றும் காணொளிகள் சமூகவலை தளங்களில் பரவிவருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இத்தகைய படங்கள் மற்றும் காணொளிகளை பரப்பும் போது அவதானமாக இருப்பதுடன் , அவற்றைத் தவிர்க்க வேண்டுமெனவும், அதுமட்டுமன்றி இவை எதிர்காலத்தில் நடைபெறாது என்பதை உறுதி செய்யவேண்டுமெனவும் அச்சபை தெரிவிக்கின்றது.
யாழில் , மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தின் போதும் அவரது சடலத்தின் படங்கள் இணையத்தில் பரவி வந்தது.
அக்காலப்பகுதியில் இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்திருந்தன. பேஸ்புக்கில் தனிநபர்கள் மற்றும் பக்கங்கள் பல இத்தகைய படங்களை எவ்வித மறைப்புகளும் இன்றி பகிர்ந்து வந்திருந்தன.
இதேவேளை , இந்தியாவின் டெல்லியில் மாணவியொருவர் ஓடும் பஸ்ஸில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வெளியே வீசப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் போது அப் பெண்ணின் படங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியாகவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.