10,449 Views
சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய்யை அவமானப்படுத்தும் வகையில், புகைப்படங்கள் காணொளிகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் நடிகர் விஜய் ரசிகர்கள் மாநகர காவல் ஆணையரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஒரு திரைப்படம் வெளியாகி, சரியாக போகவில்லை என்றால், பயங்கரமாக கலாய்த்து தள்ளி விடுகின்றனர் நெட்டிசன்கள். அந்த வரிசையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள புலி திரைப்படத்தை சமுக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர். விஜய் பற்றியும், புலி திரைப்படத்தை பற்றியும், அதன் வசூல் குறித்து வெளியாகும் தகவல்களை பற்றியும் மீம்ஸ் வேகமாக பரவி வருகின்றன.
அந்த வகையில் பயங்கரமாக கலாய்க்கப்பட்ட இந்த மீம்ஸ் விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் காவல்துறையில் புகார் அளிக்கத்துவங்கியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
கோவையில் மாநகர காவல் ஆணையகரகம் சென்ற விஜய் ரசிகர்கள், "கடந்த சில மாதங்களாக விஜய்யை இணைய தளம் மூலமாக அவமானப்படுத்தி வருகிறார்கள். சகிக்க முடியாத வாசகங்களால் சித்தரித்து, புகைப்படத்தை மோர்ஃபிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். விஜய்யின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும், எங்களைப்போன்ற பல லட்சம் ரசிகர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையிலும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் திட்டமிட்டு இந்த படங்கள் பரப்பட்டு வருகிறது.
எனவே இந்த செயல்களில் ஈடுபடும் பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை நீக்கி மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.
நன்றி: இந்திய ஊடகம்