7,277 Views
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டன.
கொழும்பு பேரா வாவி , நாவலை திறந்த பல்கலைக்கழகத்தின் அருகே அமைந்துள்ள ஏரியொன்றின் அருகிலிருந்தும் சடலங்கள் மீட்கப்பட்டன.
இதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்தும் சடலமொன்று மீட்கப்பட்டது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களில் ஒன்று கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த கீகனகம ஆராச்சிகே சந்திரசேன என்பவருடையது என தெரியவந்துள்ளது.
அதேபோல் நாவலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் 20-25 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என தெரியவந்துள்ளது.அச்சடலம் நேற்று கண்டிபிடிக்கப்பட்டது. எனினும் அச்சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.
இதேவேளை , காசல்ரீயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சடலம் , 3 நாட்களாக காணாமல் போயிருந்த , மோஹன்ராஜ் ப்ரியந்தினி என்ற பாடசாலை மாணவியினுடையது என்பது தெரியவந்துள்ளது.
இச்சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் காசல்ரீ தமிழ் வித்தியாலயத்தில் 13 ஆம் ஆண்டில் கற்ற 17 வயது மாணவியென தெரியவந்துள்ளது. அவரின் பெற்றோர் கோயில் நிகழ்வொன்றுக்கு சென்று திரும்பி வந்த வேளையில் வீட்டிலிருந்த மகளைக் காணவில்லையென தேடியுள்ளனர்.
இதன்பின்னரே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவரினுடையது எனத் தெரிவிக்கப்படும் கையடக்கத்தொலைபேசியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த பெண் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தற்கொலையா? கொலையா? அல்லது அல்லது வேறு எதுவும் வழியில் நீர்த்தேக்கத்தில் விழுந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.