ஜெர்மனியில் கொலோன் நகரில் புதுவருட நள்ளிரவில் கொண்டாட்டங்களின் போது பெண்கள் பலர் பாலியல் ரீதியான மோசமான தாக்குதல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் நடத்தப்பட்டிருந்த பாலியல் ரீதியான கொடுமைகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை இலக்குவைத்து கும்பல் கும்பலாக வந்த ஆண்கள் பல்வேறு கீழ்த்தரமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 1000 பேர் கொண்ட பெரும் கும்பலொன்று , 20-30 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து கொள்ளை மற்றும் காட்டுமிராண்டித்தனமான பாலியல் தாக்குதல்களை தொடுத்துள்ளனர். மேலும் பலர் பட்டாசுகளை பெண்களது ஆடைக்குள் போட்டுள்ளதாக சம்பவத்துக்கு முகங்கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட ஆண்கள் தமது நாட்டோ , அல்லது மேற்கத்தேய சாயல்களைக் கொண்டவர்கள் இல்லையெனவும் அரபு மற்றும் வட ஆப்பிரிக்க சாயலைக் கொண்டவர்களே தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஹம்பர்க் மற்றும் ஸ்ட்டகார்ட் உட்பட மேலும் பல இடங்களிலும் இப்படியான தாக்குதல்கள் நடந்துள்ளன. பெண்களிடம் கொள்ளை அடிக்கப்பட்டதுடன், பாலியல் ரீதியாகவும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் , சிரிய அகதிகள் என பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
பத்து லட்சத்துக்கும் அதிகமான அகதிகளை உள்வாங்கியிருக்கும் ஜெர்மனியில், இந்தச் சம்பவங்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அகதிகளை அதிகளவில் அனுமதித்ததன் விளைவே இது என அந்நாட்டு மக்கள் மற்றும் கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன. இது தொடர்பாக சமூகவலைதளங்களிலும் ‘ஹேஸ்டெக்களை’ உருவாக்கி கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இது தவிர பல்வேறு படங்கள் மற்றும் காணொளிகளும் , இணையத்தில் வெளியாகியுள்ளது.