த்ரிஷாவின் திருமணத்துக்கு சிக்கல்கொடுத்த ரஜினி,அஜித்...?வயதையும் திருமணம் பற்றிய செய்திகளையும் நடிகைகள் தாங்களாக மறைப்பது சகஜமான விஷயம் தான். இருந்தும் நடந்து முடிந்த தன் நிச்சயதார்த்தம் பற்றி உலகுக்கு தெரியவந்தும் ஊடகங்கள் மூலமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார் நடிகை த்ரிஷா. இதற்கு தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய மாஸ் நடிகர்களே காரணமாகியுள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா.....?
கெளதம் மேனனின் இயக்கத்தில் 'தல' அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்" படத்தில் த்ரிஷாவும் ஒரு நாயகியாக நடிக்கின்றார் என்பதை முன்னரே சொல்லியிருந்தோம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்ட த்ரிஷா அதற்காக பட்டபாடு கொஞ்சநஞ்சம் இல்லையாம். 30 வயதை கடந்த நிலையில் கொஞ்சம் வயது முதிர்ச்சியான தோற்றத்தில் உள்ள த்ரிஷாவை "என்னை அறிந்தால்" படத்தில் நடிக்க வைக்க 'தல' அஜித், தயாரிப்பாளர் உட்பட அந்தப் படத்தின் முக்கியமானவர்களுக்கு விருப்பம் இல்லையாம்.
இருந்தாலும் இந்தப் படத்தின் இயக்குனர் என்ற காரணத்தினால் கெளதம் மேனன் தன் செல்வாக்கை அந்த இடத்தில் பயன்படுத்தி த்ரிஷாவிற்கு சில நிபந்தனையுடனான வாய்ப்பினை வழங்கியிருக்கிறார். ஒரு மாதத்தில் இளமையான தோற்றத்துடன் வந்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தாராம்.
அதைக் கேட்ட த்ரிஷாவும் உடனே கேரளாவுக்கு ஓடிச் சென்று, மிகுந்த சவாலுக்கு மத்தியில் கேரள ஸ்பெஷலான ஆயுர்வேத மூலிகை சிகிச்சை மூலம் துள்ளும் இளமைத் தோற்றத்துடன் குறித்த ஒரு மாத காலத்தில் திரும்பி வந்திருக்கிறார். இவ்வாறு வந்த த்ரிஷாவை, வேண்டாம் என முதலில் மறுத்த தயாரிப்பு வட்டாரமே பார்த்து குளிர்ந்துபோய் விட்டனராம். அத்தோடு படத்தில் த்ரிஷாவுக்கு மட்டும் தனி ஒரு பாடலை கொடுத்து ஆடவைத்து ரசிகர்களை அசர வைத்திருக்கிறார்களாம்.
இது இவ்வாறிருக்க, நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் "லிங்கா" படத்திலும் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடியுள்ளாராம்.
இந்தநிலையில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி, வெளியீட்டுத்திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த இரண்டு படங்களிலும் நடித்துள்ள காரணத்தினால் தனது திருமணம் பற்றிய செய்தியை கூட அறிவிக்கமுடியாத கையறுநிலையில் உள்ளாராம் சாமியின் மாமி. காரணம் என்னவென்றால், திருமண செய்தி வெளியானால் வயதான நடிகையை திரையில் பார்த்து ரசிக்க யார் வருவார்கள்...? இதனால் படத்தின் வெற்றி மற்றும் வசூலுக்கு பாதிப்பு ஏற்படலாம் என படக்குழுவினர் கருதுவதுதான் என்ற விஷயத்தை வெளியில் கக்குகின்றது தமிழ் சினிமாத் திரையுலகம்.
ஆசை யாரைத்தான் விட்டது.....?
உலக நியதியில் த்ரிஷாவும் உள்ளடக்கம்.
*கணேசமூர்த்தி ராகவன்.