இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்தியாவிற்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் வகையில், Pravasi Bharatiya Divas Reel Contest 2027 என்ற போட்டியை இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இப்போட்டியில் இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் இலவசமாகப் பங்கேற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், BharatVerse செயலியில் பதிவு செய்து, ‘இந்தியா எனக்கு என்ன அர்த்தம் தருகிறது’ (What India Means to Me) என்ற கருப்பொருளில் அதிகபட்சம் 30 வினாடிகள் கொண்ட Instagram Reels காணொளியை உருவாக்க வேண்டும். இந்தப் போட்டிக்கான பதிவுகள் டிசம்பர் 20ஆம் திகதி இரவு 11.59 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்பட்ட காணொளியை #IndiaInMe என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு, @bharatversequiz கணக்கை Collaborator ஆக இணைப்பதன் மூலம் போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டியில் வெற்றிபெறுவோருக்கு இந்தியாவில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படும் முறை மற்றும் பயணத்திற்கான நிபந்தனைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்த பின்னர் பங்கேற்பது சிறந்தது.