5,356 Views
பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தில் நடித்தது பற்றி விஜய்சேதுபதி என்ன சொல்கிறார்?
“இந்தப்படத்தில் நான் ‘எமலிங்கம்’ என்ற ரயில்வே தொழிலாளியாக நடித்திருக்கிறேன். நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் என்னுள் அடங்கவே இல்லை. வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாபாத்திரம் என்று நான் தைரியமாக சொல்வேன்.
தமிழ்சினிமாவில் ரசிகர்கள் அதிகம் கண்டிராத ஒரு கதாப்பாத்திரமாக எமலிங்கம் இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இந்தக்கதாப்பாத்திரம் நிலைக்கும். இந்தக் கதாப்பாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சி என்றும் ஏதும் எடுக்கவில்லை. உண்மையை சொல்லப் போனால் நடிப்பு என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் குணாதிசயங்களையும், பின்புலத்தை முழுமையாக உணர்ந்தால் போதுமானது. எமலிங்கம் என்ற கதாபாத்திரத்தின் புதுமைக்காக சற்றே உடல் எடையை கூட்ட வேண்டியிருந்தது. மேலும் இந்தக்கதாபாத்திரத்தை புரிந்துக் கொள்ளும் வகையில் டைரக்டர் ஜனநாதன் நன்றாகவே விளக்கினார்.”
புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தூன்றிய கதையம்சம் கொண்டது. நான், ஆர்யா, ஷாம், கார்த்திகா என அனைவரும் படப்பிடிப்பு நாட்கள் முழுவதும் இனிமையாக கழிந்தது. படத்தில் யாருக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று தெரியாது. ஜனநாதன் சாரின் கதை எங்களுக்கு என்று ஒரு இடம் வகுத்திருந்தது அதில் நன்றாக நடிக்கவும் இடம் வகுத்திருந்தது.”
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் ரயில்வே கூலித்தொழிலாளியாக விஜய் சேதுபதி நடித்திருந்தாலும், படத்தில் அவருக்கு மிக முக்கியமான பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆர்யாவை தூக்கில் தொங்கவிடும் பொறுப்புதான் அது.
அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தின் க்ளைமாக்ஸ்.
=== CASTRO RAHUL ===