தமிழ்நாட்டு நிலை இப்படியிருக்க, ரஜினியின் சொந்த மாநிலமும் தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றுமான கர்நாடகாவில் "தர்பார்" படத்தை வெளியீடு செய்வதில் பிரச்சனை உருவாகியுள்ளது. காரணம், கன்னடத் திரைப்படங்கள் மட்டுமே கர்நாடகாவில் திரையிடப்பட வேண்டுமென்று தீவிர கன்னடமொழி அமைப்புக்கள் தீர்மானமொன்றை மேற்கொண்டிருக்கின்றன.
வேறு மொழிகளில் உருவான திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகளின் பலத்த எதிர்ப்பு உள்ள நிலையில், அவர்களைப் பகைத்துக்கொண்டு வேற்றுமொழிப் படங்களை திரையிட கர்நாடகாவிலுள்ள திரையரங்க உரிமையாளர்கள் முன்வரமாட்டார்கள்.
"தர்பார்" திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள நிலையில், கன்னட மொழிக்கு மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக வெளியிடவே தயாரிப்புத் தரப்பினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத தீவிர கன்னட மொழி அமைப்பினர், "தர்பார்" திரைப்படத்திற்கு எதிராக போராட்டமும் நடத்தியுள்ளனர். அத்துடன், கன்னட மொழிக்கு மாற்றம் செய்யப்படாமல் படத்தை வெளியிட தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் ரஜினிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளதால், "தர்பார்" திரைப்படத்தை திரையிட அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டு, அதிகளவு திரையரங்குகளையும் இந்தப் பட வெளியீட்டிற்காக தயார்ப்படுத்தியுள்ள நிலையில், "தர்பார்" படத்துக்கெதிரான கன்னட அமைப்புக்களின் போராட்டம் காரணமாக விநியோகஸ்தர்கள் கவலையில் இருப்பதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.
இதவேளை, ரஜினியின் "காலா" படத்தை கர்நாடாகாவில் வெளியிட்டபோதும் இப்படியான எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. ஆனாலும், எதிர்ப்புக்கள் அனைத்தையும் மீறி படம் வெளியான திரையரங்குகள் அனைத்திற்கும் காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று "தர்பார்" படமும் கர்நாடகாவில் திரை காணும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளதாம்.