சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ரஞ்சித் இணையவுள்ள புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லை என்று சொல்லப்பட்டாலும், பிரபல நடிகை ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த நடிகை நயன்தாராவாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
ஏற்கனவே நயன்தாரா ரஜினியுடன் சந்திரமுகி, குசேலன், சிவாஜி ஆகிய படங்களில் நடித்துள்ளதால் இந்தக் கதைகள் கட்டவித்து விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நயன்தாரா தரப்பு இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுவரை ரஜினி படத்திற்காக நயன்தாராவிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியபோது 'ரஜினி படத்திற்காக நயன்தாராவை அணுகவில்லை' என்று தெரிவித்தார். அப்படியானால் இந்த படத்தில் காஜல் அகர்வால், அனுஷ்கா போன்ற நாயகிகள் நடிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேட்டபோது, 'நீங்கள் எதிர்பாராத நாயகி இந்த படத்தில் நடிப்பார்" என்று மட்டும் கூறியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி தொடர்ச்சியாக 120 நாட்கள் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதும் முக்கியமானது.
ஆகவே, யார் அந்த எதிர்பாராத நாயகி என்று, கோடம்பாக்கத்தில் பெரிய பரபரப்பு நிலவி வருகிறது. யாருக்கு அதிஸ்டமோ பொறுத்திருந்து பார்ப்போம்?
-கோடம்பாக்கக் குருவி-