ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து ஹஷ்மத்துல்லா ஷஹிடி விலகுவதாக அறிவித்துள்ளார். "ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்தியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். இந்தப் பொறுப்பை வழங்கிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், சக வீரர்களுக்கும், இரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி" என்று அவர் தனது பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
2022 முதல் ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியை வழிநடத்திய ஷஹிடி, தனது தலைமையில் அணியை பல முக்கிய சர்வதேச தொடர்களில் முன்னேற்றியிருந்தார். குறிப்பாக உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சிக்கு அவரது தலைமையே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஷஹிடியின் இந்த திடீர் முடிவு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள
நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரைவில் புதிய தலைமை குறித்த அறிவிப்பை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.