12,816 Views
" பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா " என்ற சினிமா வசனத்தை நாம் அடிக்கடி கேள்விபட்டுள்ளோம் அதை மைத்திரியும் கேட்டாரோ என்னவோ இவ்வளவு நாள் பொறுத்திருந்த அவர் நேற்று பொங்கி எழுந்திருந்தார்.
அவரது உரையின் ஒவ்வொரு வார்த்தையும் ஆக்ரோஷமாகவும், இவ்வளவு நாள் மௌனத்தின் பிரதிபலிப்பாகவும் இருந்தது.
ஒரே கூட்டணியில் இருந்தாலும் தனக்கும் , மஹிந்தவுக்கும் இடையிலான இடைவெளி மிக நீண்டது என்பதை அவரது வார்த்தைப் பிரயோகங்கள் எடுத்தியம்பின.
அவரின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் மட்டுமன்றி கட்சியின் சக உறுப்பினர்களே ஆடிப்போயிருந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிறப்பு மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எனினும், அது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பிற்கு இணங்க ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு செய்தி கூறுகிறது.
இதனிடையே, பொது ஜக்கிய முன்னணியின் நிறைவேற்று சபைக்கூட்டம் கொழும்பில் ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெறுகிறது. இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சுசில் பிரேமஜயந்த , டலஸ் அழஹப்பெரும, ஜோன் செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இந்தக்கூட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.