11,862 Views
வீட்டில் இருந்தபோது காணாமல் போன சிறுமியொருவர் பின்னர் காட்டுக்குள் அமைந்துள்ள கற்குகையொன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று கருவலகஸ்வெவ- பஹரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கிரியெட்டிகே தினிதி அஹிங்சகா என்ற 3 1/2 வயதான சிறுமியே இவ்வாறு காணாமல்போய் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
பல மணித்தியால தேடலின் பின்னரே குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பகல் 3.30 மணியளவில் அவர் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பின்னர் பிரதேசவாசிகள் அருகில் உள்ள வணக்கஸ்தலமொன்றில் சிறுமி குறித்து தகவல் கேட்டுள்ளனர். இதன்போது குறித்த சிறுமி அடர்ந்த காட்டின் உள்ளே அமைந்துள்ள கற்குகையின் உள்ளே இருப்பதாகவும் , பெண்ணொருவர் அழைத்தால் மட்டும் வெளியே வருவார் எனவும் தேவாலயத்தில் இருப்போர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அடர்ந்த காட்டின் உள்ளே அமைந்துள்ள கற்குகைக்கு 30 ஆம் திகதி நண்பகல் வேளையில் குழுவொன்று சென்றுள்ளது. இதனையடுத்து குழுவில் இருந்த பெண்ணொருவர் சிறுமியின் பெயரைக் கூறி அழைத்த தும் அவர் வெளியே வந்த தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குகைக்குள் சோதனையிட்ட தாகவும் ஆனால் அதனுள் யாரும் இருக்கவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கினர்.
தனது வீட்டிலிருந்து 25 மைல்கள் தொலைவிலுள்ள காட்டினுள்ளே அமைந்துள்ள குகைக்குள் எவ்வாறு சென்றார் என்பது தொடர்பில் சிறுமியால் கூறமுடியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அமானுஷ்ய சக்தியொன்றே சிறுமியை அங்கு வரை கொண்டு சென்றிருக்கக் கூடுமென தாம் நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைகளுக்கென சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.