இந்தியாவில் மத சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்தை கண்டித்து, அவரது போஸ்டர்களை எரித்து உத்தரபிரதேச பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் இந்தி நடிகர் அமீர்கான், "நாட்டில் சமீபகாலமாக சகிப்பின்மை அதிகரித்து, சகிப்புத்தன்மைக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது. மேலும், நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதால், நாட்டைவிட்டே வெளியேறிவிடலாம் என்று எனது மனைவி யோசனை தெரிவித்தார்" என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இதை தொடர்ந்து, அமீர்கானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் அலுவலகத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், "உயிர் உள்ளவரை இந்தியாவில்தான் வாழ்வேன் என கூறிய ராஜ்கபூர் உள்ளிட்ட நடிகர்களை பின்பற்றி நாட்டின் ஒற்றுமையை பேணிக்காப்பது அமீர்கான் போன்ற நடிகர்களின் கடமை" என்றார்.
அதே நேரம் அமீர்கான் கூறியதை அலட்சியப்படுத்திவிடாமல் நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமீர்கானைக் கண்டித்து உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், பா.ஜ.க.வினர் அவரது போஸ்டர்களை எரித்து கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.