தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்ற 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான சனிக்கிழமை இலங்கை சார்பாக பங்குபற்றிய மூவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பதக்கம் வெல்லக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்பட்ட ருமேஷ் தரங்க, சுமேத ரணசிங்க ஆகிய இருவரும் பதக்கம் பெறத் தவறினர்.
ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க தனது ஆறாவதும் கடைசியுமான முயற்சியில் அதிகூடிய 83.27 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். ஆனால், அவரால் நான்காம் இடத்தையே அடைய முடிந்தது.
ருமேஷ் தரங்க தனது முதல் மூன்று முயற்சிகளில் முறையே 81.91 மீற்றர், 82.28 மீற்றர், 77.14 மீற்றர் ஆகிய தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். அவரது நான்காவது முயற்சி விதியை மீறியதாக அமைந்தது. அவரது ஐந்தாவது முயற்சியில் 76.51 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார்.
சுமேத ரணசிங்க தனது முதல் முயற்சியில் 79.81 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இப்போட்டியில் அதுவே அவரது சிறந்த தூரப் பெறுதியாக அமைந்தது. அதன் மூலம் அவரால் 7ஆம் இடத்தையே பெற முடிந்தது.
இரண்டாவது முயற்சியில் 77.82 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சுமேத ரணசிங்கவின் அடுத்த இரண்டு முயற்சிகள் விதி மீறியதாக அமைந்தது. கடைசி முயற்சியில் அவரால் 79.58 மீற்றர் தூரத்திற்கே ஈட்டியை எறிய முடிந்தது.
ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷாத் (86.40 மீ.) தங்கப் பதக்கத்தையும் இந்தியாவின் சச்சின் யாதவ் (85.16 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் ஜப்பானின் யுட்டா சக்கியாமா (83.27 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை மெத்மி விஜேசூரிய 11ஆம் இடத்தைப் பிடித்தார்.