இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 46வது மொஸ்கோ சர்வதேச திரைப்பட விழா, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா எனப் பல்வேறு தளங்களில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படத்தின் 'நமக்காய் ஒரு வானம்' என்ற பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகை ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். தற்போது இப்பாடல் இணையதளங்களில் வைரலாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.