64 Views
இந்தியாவின் கிழக்கு இமயமலைப் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், இதுவரை அடையாளம் காணப்படாத ஐந்து புதிய சிறிய கொம்புத் தவளை இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து அருணாசலப் பிரதேசத்தின் மலைக்காடுகளில் மேற்கொண்ட ஆய்வின் ஊடாக இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
புதிதாகக் கண்டறியப்பட்ட தவளை இனங்களில், நத்தைகளை உணவாக உட்கொள்ளும் Jingophrys tanogogo என்ற தவளை விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.இதன் செரிமானப் பகுதியில் நத்தைகளின் ஓடுகள் இருப்பதை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் நத்தைகளை உணவாக உட்கொள்ளும் தவளை இனமாக இது முதன்முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், இந்தத் தவளைக் குடும்பத்திலும் இத்தகைய உணவுப் பழக்கம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் Royal Society Open Science என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. தவளைகளின் மரபணுக்கள், உடலமைப்பு மற்றும் ஒலிகளை ஆராய்ந்ததன் மூலம் புதிய இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இமயமலைத் தொடர் உருவான விதமும் ஆசியப் பருவமழையின் வளர்ச்சியும் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் இந்தத் தவளைகள் பல்வேறு இனங்களாகப் பரிணமிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இப்புதிய இனங்களின் வாழ்வியல் மற்றும் பாதுகாப்புத் தேவைகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.