பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் கல்வித்துறை செயல்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகள் வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதிக்கும் செயல் எனக் கடுமையாகச் சாடினார். "எந்தத் துறையில் தவறு நடந்தாலும் அது தவறுதான். ஆனால், அனைத்திற்கும் அடிப்படையான கல்வித்துறையில் ஊழல் நடந்தால் எப்படிப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? பள்ளிப் பாதுகாப்பிலெல்லாம் விளையாடியிருக்கிறார்கள்; இது அறிவுலகமா இல்லை ஊழல் உலகமா என்றே தெரியவில்லை" என அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நானே சட்டமன்றத்தில் கைகட்டி அமைதியாகத்தான் உட்கார்ந்திருப்பேன். ஆனால், அவர்களே 'திறந்துதான் பாருங்களேன்' என ஆசைப்பட்டுக் கேட்கிறார்கள். 'அய்யோ வந்துட்டாரே, கலாய்ப்பாரே அவரு' என்று சொல்லும் அளவுக்கு அவர்களே வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறார்கள்; வேற என்ன பண்ணுறது, சரி திறங்க சார்" என உடல் மொழியோடு நடித்துக்காட்டிப் பேசினார். முதல்வரின் இந்தப் பேச்சுக்கு அரங்கில் இருந்த மாணவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த கைதட்டலும் ஆரவாரமும் எழுந்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த வசனமும், செய்கையும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது