புதுமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்க, நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரஷாந்த் நடிக்கும் திரைப்படம் சாஹசம்.
தமன் இசையமைப்பில் இந்தப் படத்தில் இசை பொக்கிசங்கள் நிறையப் பொதிந்திருக்கின்றன என்பது உங்களுக்கான விருந்தாக அமையும். அந்தளவுக்கு இசைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து, ஏராளமான பிரபலங்களை பாட வைத்திருக்கிறார்கள்.
அனிருத், லட்சுமி மேனன், அண்ட்ரியா இவர்களோடு இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகர்களான மோஹித் சவ்ஹான், யோ யோ ஹனிசிங், அர்ஜித் சிங் ஆகியோர் ஒரு பாடலில் இணைந்தும் பாடியுள்ளார்கள்.
இது ஒரு பக்கம்.
இப்பொழுது இன்னுமொரு இசைப் பிரம்மாண்டத்தையும் இந்தப் படத்தின் ஒரு பாடலில் கொண்டு வந்து பாட வைத்துள்ளார்கள். சங்கர் மகாதேவன் இந்தப் படத்தில் கபிலன் வரிகளை வடிக்க ஸ்ரேயா கோஷலோடு இணைந்து ஒரு பாடலை பாடி முடித்திருக்கிறார்.
மிக இனிமையாக பாடல் அமைந்திருப்பதாக பாராட்டிய படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், பாடல்கள் அத்தனையும் மிகச் சிறப்பாக வந்துள்ளன. இசை வெளியீடும் எல்லோரும் எதிர்பார்க்கும் விதமாக அசத்தலாகவே அமையும் காத்திருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அத்தோடு, சங்கர் மகாதேவன் பாடிய பாடலின் இனிமை, அழகு கண்டு பிரஷாந்த் அன்போடு ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
எல்லோரையும் எதிர்பார்ப்போடு காத்திருக்க வைத்திருக்கும் சாஹசம் திரையிசைப் பாடல்கள், படத்தின் பெயரைப் போலவே சாஹசம் செய்யுமா என்று நாங்களும் இசைப்பிரியர்களோடு இணைந்து இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.