கழுத்தளவு சேற்று நீரில் தினந்தோறும் நீந்திச் சென்று தன மாணவர்களின் கல்விப்பசி போக்கும் ஆசிரியர் இந்தக் காலத்திலும் இருக்கிறார் என்றால் அது ஆச்சரியத்துக்குரியது மட்டுமில்லை, போற்றக்கூடியதுமாகும்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தின் சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த 40 வயதான ஆசிரியர் அப்துல் மாலிக் ஒவ்வொரு நாளும் காலையில் 9 மணிக்கு தன் கிராமத்தின் ஆற்றங்கரையின் ஒரு புறத்தில் நின்று ஆடைகளை மாற்றி, அவற்றை நனையாத மாதிரி பத்திரப்படுத்திக்கொண்டு கழுத்தளவு நீந்தி மறுகரை அடைகிறார்.
மீண்டும் நல்ல ஆடைகளுக்குள் தன்னை உட்புகுத்தி காட்டு வழியாக மலையேறி 20 வருடங்களாகக் கற்பிக்கும் பாடசாலையைச் சேர்கிறார்.

இவ்வளவும் எதற்காக?
"பஸ்ஸில் ஏறினால் 12 கிலோ மீட்டர் தூரம், 3 மணி நேரம் எடுக்கும். இப்படியே நீந்தி, பின் நடந்து போனால் 25 நிமிடங்கள். நேரத்தையும் மிச்சப்படுத்தலாம், அந்த நேரத்தில் மாணவர்களுக்கு ஏதாவது பயனுள்ளதா சொல்லிக் கொடுக்கலாம்" என்கிற மாலிக்குக்கு 20 வருட அனுபவம் அலுக்கவில்லையாம்.
வெறும் 25000 ரூபாய் சம்பளத்துக்காக அல்ல இது; அதையும் தாண்டிய ஆத்ம திருப்தி என்கிற அப்துல் மாலிக்கின் மாணவர்கள் இவரது பெயரைச் சொன்னாலே உருகிப் போகிறார்கள்.
அதில் ஒரு பத்து வயது மாணவன் தன் எதிர்கால லட்சியம் பற்றிக் கேட்டபோது "மாலிக் சேர் போல ஆசிரியராக வரவேண்டும்" என்கிறான்.