இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கழுகு கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் யட்சன்.
பட்டியல், சர்வம், ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து ஆர்யா - விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளியாகவிருக்கும் ஐந்தாவது படம். இரண்டு நண்பர்களின் நட்பு மற்றும் அதை சார்ந்த கதைத் தளமே யட்சன். காமெடி, ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் என்று உருவாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் கழுகு நாயகன் கிருஷ்ணா தன்னுடைய சகோதரனின் இயக்கத்தில் முதன் முறை நடித்திருக்கிறார். விஷ்ணுவர்தனின் அனைத்துப் படங்களுக்கும் இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜாவே இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
விஷ்ணுவர்தன் இந்தப் படம் பற்றி கூறும் போது, “ இரண்டு புறம்போக்குகளின் கதை. அவர்களின் நட்பு, காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாமே இருக்கும். முதன் முறையாக என் தம்பியை வைத்து இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது, அதுமட்டுமில்லாமல் ஆர்யாவை வைத்து படம் ஆரம்பிக்கும் போது இருக்கும் புத்துணர்வு படம் முடியும் வரையிலும் இருக்கும். அந்த அளவுக்கு எங்களுக்குள் புரிதல் இருக்கிறது. கடைசி கட்ட பணிகள் நடந்துவருகிறது. விரைவில் படத்தை எதிர்பார்க்கலாம்” என்றார்.
-கோடம்பாக்கக் குருவி-