வரலாற்றில் முதன் முறையாக இருநாட்டு தலைவர்கள் சந்தித்து, முக்கியத்துவம் மிகு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதல்முறையாக ரஷிய அதிபர் புட்டினும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மைய காலங்களில் வடகொரியா, அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம், உலக நாடுகளையே அச்சத்திற்கு உள்ளாக்கி வந்தது. இதன் காரணமாக வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பின்னர், அணுவாயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தியிருந்தது.
இந்தநிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் வரவேற்றன. இதன் தொடர்ச்சியாக டிரம்ப்-கிம் ஜொங் உன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால், வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புட்டினும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் 24-ந் திகதி புதின் வடகொரியா செல்கிறார் என்றும், அந்த பயணத்தின்போது இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்றும், தென்கொரியா அரசாங்க ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறான போதிலும், இந்த சந்திப்பு குறித்து தகவலை ரஷியாவோ, வடகொரியாவோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.