இமயமலையில் அவதானிக்கப்பட்ட கால்த்தடம் பனிமனிதனின் கால் தடம் இல்லை என்று, நேபாள ராணுவ அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.
பல நூற்றாண்டுகளாக, ''எட்டி'' எனப்படும் பனிமனிதன் இமயமலை பனிபிரதேசங்களில் வாழ்வதாக ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. நேபாளத்தில் உள்ளவர்கள் பனி மனிதனை தெய்வத்திற்கு சமமாக கருதுகின்றார்கள். இந்த நிலையில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள், அண்மையில் இமய மலையில் ஏறும் போது, சில விசித்திர காலடித் தடங்களைப் அவதானித்திருந்தார்கள்.
குறித்த காலடித்தடங்கள் மனிதர்களின் காலடி தடங்களை விட, அளவில் மிக பெரிதாக இருந்துள்ளன. அவற்றை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை ''எட்டி'' எனப்படும் பனிமனிதனின் காலடித் தடங்கள் என்று அறிவித்து, அதனை Tweetter ல் பதிவிட்டிருந்தார்கள். குறித்த பதிவில், ''மகாலு'' முகாம் அருகே எட்டியின் காலடித்தடம் தென்பட்டதாக இந்திய ராணுவம் கூறியிருந்தது. இந்தநிலையில் இந்திய ராணுவம் பதிவிட்ட பனி மனிதன் தொடர்பான பதிவை, நேபாள ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக நேபாள ராணுவச் செய்தி தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே, ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் கால் தடங்களை பார்த்துள்ளனர். இந்திய ராணுவத்துடன் எங்களது தொடர்பு குழுவும் உடன் சென்றது. உண்மை என்னவென்பதை நாங்கள் அறிய முயற்சித்தோம். ஆனால், உள்ளூர் வாசிகள், காட்டுக்கரடியின் பாத தடங்கள் என அறுதியிட்டு தெரிவித்தனர். மேலும், இது போன்ற தடங்கள் இப்பகுதிகளில் அடிக்கடி தென்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்” என்று கூறினார்.