பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடி (Shahid Afridi ) , தனது உண்மையான வயதை முதன் முறையாக வெளிப்படுத்தி, அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற பின்னர் அவர் தனது உண்மையான வயதை முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். 1996-ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனவர் அப்ரிடி. குறித்த ஆண்டில் நைரோபியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்து, உலக சாதனை ஒன்றை நிலை நாட்டினார். அப்போது ஷஹீத் அப்ரிடியின் வயது 16 ஆண்டு, 217 நாட்கள் என்று சாதனை புத்தகத்தில் பதிவானது.
ஆனால், அந்த காலப்பகுதியில் அவரது தோற்றம் 16 வீரர் போன்று இல்லை என்றும், அவரது வயது அதிகமாக இருக்கும் என்றும் விமர்ச்சிக்கப்பட்டது. இந்த விடயம் அவரது வாழ்வில் பல தடவைகள் சர்ச்சை எழும்ப காரணமானது. இது இவ்வாறு இருக்க, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற பின்னர், அவர் தனது உண்மையான வயதை முதன் முறையாக தெரியப்படுத்தியுள்ளார். "Game Changer " என்ற பெயரில் அப்ரிடி தன்னை குறித்து எழுதிய சுயசரிதை புத்தகத்தில், சில சுவாரசிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில், "37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தபோது எனது வயது 19. மற்றவர்கள் சொல்வது போல் 16 வயது அல்ல. நான் 1975-ம் ஆண்டு பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாக எழுதிவிட்டார்கள்'' என்று கூறியுள்ளார். ஆனாலும்கூட அவரது சுயசரிதையில் பிறந்த தேதி, மாதம் போன்ற விபரங்கள் குறிப்பிட்டு இருக்கவில்லை. இதனிடையே, இந்த நாள்வரை ESPNcricinfo வீரர்களின் பயோடேட்டாவில் அப்ரிடியின் பிறந்த திகதி 1980-ம் ஆண்டு, மார்ச் 1 என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் தனது வயது குறித்த விபரத்தை வெளியிட்டு கிரிக்கெட் உலகிலேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பிறந்த ஆண்டு 1975 என்பது உண்மை என்றால், அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்த போது அவரது வயது 21 ஆக இருந்திருக்க வேண்டும். 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக கடைசியாக 20 ஓவர் போட்டியில் ஆடினார். அப்போது அவரது வயது 36 என்று கூறப்பட்டது.
எவ்வாறானபோதிலும் பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் அப்ரிடி 27 டெஸ்ட், 398 ஒரு நாள் போட்டி மற்றும் 99 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கின்றார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையையும் இவர் பெற்றுள்ளார். மொத்தமாக 351 சிக்சர்கள் அடித்துள்ள பெருமை இதுவரை சாரும். இவ்வாறான நிலையில், தற்போது இவரது வயது விவகாரம் பெரும் சல சலப்பை ஏற்படுத்தி உள்ளது.