நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகவிருக்கின்றது "ராவணக்கோட்டம்" திரைப்படம். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நடிகை 'கயல்' ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சாந்தனு நடிப்பில் நீண்ட காலமாக எந்தப் படங்களும் வெளியாகாத நிலையிலும், அவரது நடிப்பில் வெளியான சில படங்களும் சாந்தனுவுக்கு சொல்லும்படியாக அமையாத நிலையிலும் வரவிருக்கின்றது "ராவணக்கோட்டம்". ஆனால், நடிகை ஆனந்தி நடிப்பில் கடைசியாக வெளியான "பரியேறும் பெருமாள்" திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆனந்தியின் நடிப்பிற்கு பெரும் பாராட்டுக்களும் கிடைத்திருந்தன.
இந்தநிலையில், படமாகவிருக்கும் "ராவணக்கோட்டம்" திரைப்படமும் இதுவரைக்கும் படமாக்கப்படாத வேறுபட்ட கதைக்களத்துடன் கூடிய வித்தியாசமான கதைக்கருவுடன் உருவாகவுள்ளது என்கின்றனர் படக்குழுவினர். அத்துடன், இந்தப் படத்தின் இசைப்பணியை கவனிக்க இசையமைப்பாளர் ஜஸ்ரின் பிரபாகரன் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் "மதயானை கூட்டம்" என்ற திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் என்ற இயக்குனர் 6 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தனது இயக்கத்தில் திரைக்குக் கொண்டுவரும் படமாக "இராவண கோட்டம்" அமையவுள்ள நிலையில், இந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பை கண்ணன் ரவி ஏற்றிருக்கின்றாராம்.