அனுமதியின்றி தனது பெயர் மற்றும் புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என குறிப்பிட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகர் நாக சைதன்யா வழக்கு தொடர்ந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
அதன்பிறகு பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து குறித்து இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான் நாக சைதன்யா நீதிமன்றத்தை நாடியுள்ளார் .
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங் முன்னிலையில் மே மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி “பொது வாழ்க்கையில் இருக்கும் பிரபலங்கள் சாதாரண குடிமக்களை விட கூடுதல் பொது கண்காணிப்புக்கு உள்ளாவது இயல்புதான் என்றாலும், அதற்கும் சில எல்லைகள் உள்ளன. நாக சைதன்யாவின் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினரை நீதி மன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 30-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.