ஆரோக்கியமாகவும், அழகாகவும் வாழ்வது இப்போதைய காலத்தில், மிகுந்த சவாலாகி விட்டது. ஆடம்பரம் என்ற போர்வையில் நாம் அணியும் ஆடைகள் எமக்கு உகந்தனவாக இருப்பதில்லை என்ற உண்மையை அறிந்தவர்களும், சில தவறுகளை இழைத்து விடுகின்றார்கள்.
பருவகால மாற்றங்கள் ஏற்படும் போது, அவற்றுக்கேற்ற வகையில் எமது ஆடைகளை தெரிவு செய்ய வேண்டும். இதன்மூலம் எமது சருமத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதுடன், நோய்களில் இருந்து எம்மைக் காப்ப்பாற்றிக் கொள்ளவும் முடியும் என, மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
கோடைக் காலத்தில் ஆடையைத் தேர்ந்தெடுப்பதில், வன்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக மெல்லிய நிற ஆடைகளை கோடைக் காலத்தில் அணிவது சிறப்பானதாகும்.
கறுப்பு, சிவப்பு மற்றும் ‘பளிச்’ வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். எனவே, கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்தி ஆடைகளாகும். கோடையினால் நம் உடலில் வெளியேறும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது. பின் வெயிலின் தாக்கத்தால் உடனே அதை வெளியேற்றும்.
அத்துடன் சூரியனிடமிருந்து ஒரு மின் கடத்தியைப் போன்று செயல்பட்டு வெப்பத்தை நம் உடலின் மீது அண்ட விடாமல் தடுக்கும் ஆற்றல் பருத்தித் துணிக்கு உண்டு. எனவே கோடைக்காலத்தில் பருத்தி வகை ஆடைகளை அணிந்து உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.