செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படத்தில், கதாநாயகியாக களமிறங்கியுள்ள நடிகை சாய்பல்லவி, அண்மையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
''செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்தது உண்மையிலேயே எனக்கு இனிமையான அனுபவம் தான். அவர் பல சந்தர்ப்பங்களில் கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரிடம் மிகவும் எளிமையாக கற்றுக்கொள்ளலாம்.
செல்வராகவனின் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் ஆளுக்கொரு இடத்தில் நின்று பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும்? என்று அவர் தெளிவாக சொல்லிக் கொடுப்பார்.
ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு வரவில்லை. நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டார். அன்று இரவு எனக்கு நடிப்பு வரவில்லை. சினிமா வாழ்க்கையை துறந்து விட்டு, மருத்துவராகவே இருந்து விடுகிறேன் என்று, என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். ஆனால் மறுநாள் ஒரே ‘டேக்’கில் அவர் நினைத்த முக பாவம் வந்து விட்டது.
பிறகு சூர்யாவிடம் கேட்ட போது, நானும் நிறைய ‘டேக்’ வாங்கித் தான் நடிக்கிறேன் என்றார். அதன்பிறகு தான் சிறிது ஆறுதலாக இருந்தது. செல்வராகவன் சினிமாவையும், நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார்.” என, நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.