சமூக வலைத்தளங்களிலேயே, பட்டி தொட்டி எங்கும் பால்குடிக்கும் குழந்தை முதல் பாக்கிடிக்கும் ஆச்சி வரை எல்லோர் பயன்பாட்டிலும் உள்ள ஒன்று என்றால் அது Face Book தான். இப்போதெல்லாம் Face Book வைத்திருக்கும் ஒருவர், தான் தொடர்பிலும், தனது விருப்பு வெறுப்புக்கள் சம்பந்தமாகவும், பிடித்தது பிடிக்காதது, செய்ய வேண்டியது, வெறுப்பது என்று பலவாறான பதிவுகளை இட்டு வருகின்றார்கள். சிலர் தமது உண்மையான விபரங்களை மறைத்து, பொய்யான தரவுகளை கொண்டு face book கணக்குகளை ஆரம்பித்து, தவறான சில நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அண்மையில் இலங்கையில் தீவிரவாதிகள் மேற்கொண்டிருந்த கொடூர தற்கொலை தாக்குதலின் பின்னர் சமூக ஊடகங்களில் குறிப்பாக Facebook ல் வெறுப்பு பேச்சுக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்குவது , தேவையற்ற பதிவுகள் போன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் விதமாக Face Book நிறுவனம் பல்வேறு தொழில் நுட்பங்களை ஆராய்ந்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, சுமார் 300 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக Face Book நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது ஒரு மாதத்தில் ஆரம்பிக்கப்படும் கணக்குகளில் சுமார் 5% சதவீதம் போலி கணக்குகள் என்று Face Book நிர்வாகம் அவதானித்துள்ளது. 2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 1.2 பில்லியன் போலி கணக்குகளும் 2019 ஜனவரி முதல் மார்ச் வரையில் சுமார் 2.19 பில்லியன் போலி கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், Face Book நிறுவன துணைத் தலைவர் கை ரோசென் கூறுகையில், “ஒரே நேரத்திலேயே பல போலி கணக்குகள் தொடங்கப்படுவது எங்களைக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உட்படுத்துகிறது.
ஒவ்வொரு 10 ஆயிரம் பதிவுகளிலும் 11 முதல் 14 பதிவுகள் தேவையற்ற தகவல்கள் பதிவிடுதல் மற்றும் சமுதாயத்திற்கு எதிரான கருத்துக்கள் போன்றவை அதிக அளவில் பதிவிடப்படுகிறது. அதேபோல், 10ஆயிரம் பதிவுகளில் 25 பதிவுகள் வன்முறைக்கு வழிவகுப்பதாகவே உள்ளன” எனக் குறிப்பிட்டார்.