அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ அந்நாட்டின் சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்திருக்கிறது. எண்ணிக்கையில் அடங்கா அளவிலான மரங்கள், 50 கோடிக்கும் மேற்பட்ட விலங்குகள் என பல உயிரினங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பற்றி எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீக்கு இரையாகி உள்ளன.
6.3 மில்லியன் ஹெக்ரயருக்கும் அதிகமான நிலங்கள் தீயால் கருகியிருக்கிறது.
ஆனால், அங்கு ஒரு சில இடங்களில் சிறு உயிர்கள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. அவற்றை முரே லோவி என்ற உள்ளூர் புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸில் குல்நுரா என்ற பகுதியில் தீயால் பாதிக்கப்பட்ட அவரது வீடு எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்க சென்ற அவர், அந்த இடத்தில் முளைக்கத் தொடங்கிய பச்சைப் புற்களை படம் பிடித்துள்ளார்.
ரோஸ் நிறத்திலான இலைகளும் கருகிய மரக்கிளைகளில் இருந்து துளிர் விடுவதை அவர் பார்த்திருக்கிறார்.
பெரும் பேரழிவு என்று வர்ணிக்கப்பட்ட இந்த காட்டுத்தீ அணைந்த ஒரு சில நாட்களிலேயே இவ்வாறு உயிர்களை அந்த இடத்தில் மீண்டும் பார்ப்பது நம்பிக்கை அளிப்பதாக அவர் கூறுகிறார்.