25,801 Views
'இனிமே இப்படித்தான்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இப்படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குநராக அறிமுகமாகிறார்.
இன்று காலை முதலே வட்ஸ்-எப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தன்னுடன் நடித்த ஆஷ்னா சாவேரியை சந்தானம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியானது. திருப்பதியில் சந்தானம், ஆஷ்னா இருக்கும் புகைப்படமும் வெளியானது.
இதுகுறித்து சந்தானம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது, "நவம்பர் 15ஆம் தேதி முதல் சந்தானம் சார் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. எப்போதுமே நாயகனாக ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வது சந்தானத்தின் வழக்கம். புதிய படம் ஆரம்பிக்க இருப்பதால், இன்று படக்குழுவினரோடு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை இப்படி தவறான செய்தியாக பரப்பிவிட்டார்கள். ஆஷ்னா சாவேரி அப்படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தானம் நாயகனாக நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திலும் ஆஷ்னா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.