திருடுவதற்காகச் சென்ற இந்தத் திருடன், தனக்கு அசதியாக இருந்ததால் சற்று ஓய்வெடுப்பதற்காக தூங்கிய நிலையில், மறுநாள் காலை திருடனை காவல்துறை அதிகாரிகள் எழுப்பிக் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் லக்னோவிலுள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டில் திருடுவதற்கு பொருத்தமான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த திருடன், வீட்டின் உரிமையாளரான மருத்துவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, திருடுவதற்காக நுழைந்துள்ளார்.
தான் மதுபோதையில் குறித்த மருத்துவரின் வீட்டினுடைய கதவினை உடைத்து, அங்கிருந்த விலைமதிப்புமிக்க பல பொருட்களைத் திருடி, அவற்றை வெளியில் எடுத்துச் செல்லத் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் தனக்கு ஏற்பட்ட அசதியினால் சிறிது நேரம் ஓய்வெடுக்க நினைத்ததாகவும் திருடன் கூறியுள்ளான்.
இந்த நிலையில் குறித்த மருத்துவரின் வீடு திறந்த நிலையில் இருந்ததை அவதானித்த அயலவர்கள் காவல்நிலையத்திற்கு முறைப்பாடளித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவரின் வீட்டிற்குச் சென்ற காவலர்கள், களைப்பில் தூங்கிக்கொண்டிருந்த திருடனை எழுப்பி கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் இது போன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.