ஆசிய ஒலிபரப்பு ஊடக வலையமைப்பின் ஒரு அங்கமான சூரியன் வானொலி ஒவ்வொரு வருடமும் முன்னெடுக்கும் 'உதவும் கரங்கள்' நிகழ்ச்சித் திட்டம் இவ்வருடம் வன்னி - கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள சிறுவர், சிறுமியர், மாணவியருக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதகாலமாக சூரியன் வானொலியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, நேயர்களினால் வழங்கப்பட்ட ஏராளமான பொருட்கள், கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்து, கல்வி கற்க சிரமங்களை எதிர்கொள்ளும் சிறுவர், சிறுமியர் மற்றும் சிறுவர் இல்லங்களில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்று வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைக்காக சூரியன் வானொலி உதவும் கரங்கள் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறது.
கடந்த வருடம் கொஸ்லாந்தை - மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் கரங்கள் அவர்களது கல்வி மற்றும் நாளாந்த வாழ்க்கைக்கான பொருட்களை வழங்கி இருந்தது.
இந்த வருடமும் பெருமளவிலான பொருட்களை சூரியன் குழுவினர் வன்னியில் உள்ள குழந்தைகளுக்காக எடுத்துச் செல்கின்றனர்.
ஆசிய ஒலிபரப்பு வலையமைப்பின் தலைவர் திரு,ரெய்னோ சில்வாவின் வழிநடத்தலில் சூரியனின் இந்த உதவும் கரங்கள் அறப்பணிக்கு நாடெங்கிலும் இருந்தும் சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் வாழ் தமிழ் பேசும் மக்களினதும் ஆதரவு கிடைத்துள்ளது.