அப்பாடா.....ஒரு மாதிரியாக பல பிரச்சினைகள், சவால்களைத் தாண்டி வெற்றிநடை போடுகிறதே...என்று கத்தி படக்குழுவினரும், தளபதி ரசிகர்களும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க, ஆரம்பிக்கிறது மீண்டும் ஒரு பிரச்சினை.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பல வசனங்களுக்கு கண்டனம் வந்துகொண்டிருக்க, இப்போது ஒரு தொலைபேசி இலக்கமும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.
கத்தியின் கதாநாயகி சமந்தா, தன் காதலன் விஜயிடம் தனக்கு அழைக்குமாறு ஒரு தொலைபேசி இலக்கத்தை சொல்வதாகவும், அந்த இலக்கத்திற்கு விஜய் அழைக்கும் போது அந்த அழைப்பு நாய்கள் பராமரிப்பு நிலையத்திற்கு செல்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தொலைபேசி இலக்கத்தை நடிகர் விஜய் ஒரு சில முறைகள் திரைப்படத்தில் உச்சரிக்கிறார். இங்கே குறிப்பிடப்படுகின்ற இந்த இலக்கம் குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அருமனை பிரதேசத்திலுள்ள ஒரு ஆசிரியரின் இலக்கம் என தெரியவந்துள்ளது.
இந்த தொலைபேசி இலக்கத்தால் தான் புதிய சிக்கல்கள் உருவாகி இருக்கிறது.
இது தொடர்பில் குறித்த ஆசிரியரிடம் கேட்ட போது, இத் திரைப்படம் வெளியான நாளிலிருந்து இந்த ஆசிரியருக்கு ஒரே அழைப்பு வந்த வண்ணம் இருப்பதாகவும், விஜயின் விசிறிகளும் அழைப்பதாகவும், இதனால் தனக்கு நிம்மதியில்லையெனவும் கூறியுள்ளார். இந்த விடயத்தை இயக்குனர் முருகதாஸின் காதுகளில் கொண்டு சேர்க்க உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தன் நண்பர்களின் உதவியுடன் இந்த ஆசிரியர் முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ம்ம்ம்ம்...
ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கித்தவித்த கத்திக்கு அடுத்த ஆப்பு ஒன் த வேயில் உள்ளது போலிருக்கிறது. ஒரு படி ஏறி இரண்டு படி சறுக்குவது என்பார்களே அது இது தானோ?
தொகுப்பு – ர. பிரவீனா