நடுவானில் சக விமானியின் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், சாதுரியமாக செயற்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
Flydubai விமானம் கடந்த மாதம் 30-ஆம் திகதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, அதன் இணை விமானி, ஓமான் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி திடீரென கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார்.
படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் இருந்த நிலையிலும், ஸ்மித் மச்சார் சாதுரியமாக செயல்பட்டு 174 பயணிகளையும் காப்பாற்றி இருந்தார்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு நேரில் சென்று துபாய் இளவரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், விமானி ஸ்மித் மச்சாரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவரது அபாரத் துணிச்சலையும், நூற்றுக்கணக்கான உயிர்களைக் காத்த தியாக உணர்வையும் மனதாரப் பாராட்டிய இளவரசர், அமீரகம் எப்போதும் அவருக்கு துணையாக இருக்கும் என்று உறுதியளித்தார்.