இரட்டைச்சவாரி செய்யும் இளையதளபதிவித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட ஃபெண்டஸி படங்களை இயக்கும் சிம்புதேவனின் இயக்கத்தில் தற்போது இளையதளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கின்றார் என்பதையும், அந்தப்படத்தில் நடிக்கும் நட்சத்திரப்பட்டாளம் உட்பட படம் பற்றிய சுவாரஸ்யமான விசயங்களை ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம்.
இந்தப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு கதாநாயகிகளுடன் இரட்டைச்சவாரி செய்யும் நம்ம இளையதளபதி, "கத்தி" படத்தைப்போலவே இதிலும் இரண்டு வேடங்களில் நடிக்கின்றாராம். மன்னர் காலத்துக்கதை ஒன்றுதான் இந்தப்படத்தின் கதைக்கரு எனச் சொல்லப்படும் நிலையில், 'ராஜா' வேடத்தில் வரும் விஜய்க்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்க, இன்னொரு பாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு ஸ்ருதிஹாசன் ஜோடியாகியிருப்பதாகவும் கதைகள் கசிந்துகொண்டிருக்கின்றன.
இன்னமும் பெயர் சூட்டப்படாது, "விஜய்58" எனக் குறிப்பிடப்படும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலை பகுதியில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற 'செட்'இல் படமாக்கப்பட்டுவரும் நிலையில் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறதாம்.
இந்தநிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளதோடு அதில் 'ராஜா' வேடத்தில் வரும் விஜய்க்கு ஜோடியான ஹன்சிகா இளவரசியாக தோன்றுகின்ற காட்சிகள் படம்மாக்கப்படுகின்றன. அதனால் இளவரசியாக வரும் ஹன்சிகா கத்திச்சண்டை போடும் காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளதாகவும், அதற்காக அவர் பெரும் சிரமத்துக்கும், பிரயத்தனத்துக்கும் மத்தியில் வாள்பயிற்சி எடுத்திருப்பதாக சொல்லியிருக்கின்றாராம் இந்த அழகுப்பதுமை.
அதுமட்டுமல்லாமல் இன்னும் இந்தக்காட்சி படம்மாக்கப்படவில்லை என்பதனால், "எப்போது இந்தச்சண்டை படமாக்கப்படும் என்ற அதிக ஆவலோடு, கத்திச்சண்டை போடுவதற்கு இந்த இளவரசி காத்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பயமாகவும் படபடப்பாகவும் இருக்கிறது.ஆனாலும் இளவரசி தயார்" என்று twitter சமூக வலைத்தளத்தில் சந்தோஷமாக கூறியுள்ளாராம்.
இதேவேளை நாங்கள் முன்னரே கூறியிருந்தது போல, இளையதளபதி விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி(PRO) பி.டி.செல்வக்குமார் இந்தப்படத்தை தயாரிக்க, விஜய்யின் படங்களை கேரளாவில் வெளியிடும் நிறுவனமான தமீன் ஃபிலிம்ஸ் அவரோடு இந்த படத்தயாரிப்புப்பணியில் தற்போது இணைந்துள்ளதாகவும் தமிழ்சினிமாத்தரப்பு தகவல்கள் சொல்கின்றன.
யார் இணைந்தாலும் பிரிந்தாலும் வரும் லாபம் என்னவோ இளையதளபதிக்கு தானாம்.... சொல்கின்றார்கள் கோடம்பாக்கத்தினர்.
*கணேசமூர்த்தி ராகவன்.