3,500 Views
வரும் மே 1ஆம் தேதி ‘வை ராஜா வை’ திரைக்கு வருவதையொட்டி, இப்படத்துக்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இயக்குனர் ஐஸ்வர்யா.ஆர். தனுஷ் இதில் கலந்துகொண்டு பேசுகையில், “இது ஜாலியான, கலாட்டாவான கமர்சியல் படம். ‘3’படத்தை மனதில் வைத்துக் கொண்டு இதைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.முழுக்க காதலைச் சுற்றியே ‘3’ படம்இருந்தது. ஆனால்,‘வை ராஜா வை’ காதல் படம் அல்ல. த்ரில்லர் வகை படம். ஆனாலும் காதல் மூட் இருக்கும்.
“பொதுவாக பெண் இயக்குனர்கள் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற இமேஜ் இருக்கிறது. அதை மாற்றும் படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். “எனக்கு எப்போதுமே சைக்காலஜி விஷயங்களில் அதிக ஆர்வம். அதன் அடிப்படையில்தான் 3 படத்தின் கதையை அமைத்திருந்தேன். இந்த படத்திலும் ஒரு விஷயத்தை கையாண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இந்த கதை வித்தியாசமானது.
“நான் எழுதியிருக்கும் கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்களோ, அவர்களை வைத்துப் படம் பண்ணுவதுதான் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் இப்படத்துக்கு கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் பொருத்தமாக இருந்தார்கள். “நான் விவேக் ரசிகை. அவர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். இயக்குனர் வசந்த் சாய் ஹீரோவின் அப்பா கேரக்டரில் நடிக்கிறார்.
“இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஆட்டோ டிரைவர் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். தவிர, தனுஷ் இந்த படத்தில் கொக்கி குமார் என்ற பெயரில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். “ஏ.ஜி.எஸ். பட நிறுவனத்தார் என்மேல் நம்பிக்கை வைத்து கதைக்கு தேவையான செலவை தாராளமாக செய்தார்கள். யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், வேல்ராஜ் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளன” என்றார் இயக்குனர் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ்.
“இந்த படத்தை உங்கள் கணவர் தனுஷும், அப்பா ரஜினியும் பார்த்து விட்டார்களா? என்ன சொன்னார்கள்?” என்று ஒரு செய்தியாளர் கேட்டவுடன் பதில் அளித்த அவர், “தனுஷ் இல்லை என்றால் நான் இயக்குனராக ஆகி இருக்கவே முடியாது. என் முதல் படத்தில் என்னை நம்பி கால்ஷீட் கொடுத்து, நடித்து, என்னை இயக்குனர் ஆக்கியவர் அவர். அவர் இல்லாமல் இந்தப் படமும் சாத்தியமே இல்லை. குடும்ப அளவில் அவருடைய ஒத்துழைப்பு இல்லை என்றால், நான் படம் இயக்கவே முடியாது. அப்பாவின் ஆசீர்வாதம் எப்போதும் என்னுடன் இருக்கிறது. இரண்டு பேரும் இந்த படத்தை பார்த்துவிட்டார்கள். அவர்கள் இருவருக்கும் இந்த படம் பிடித்திருக்கிறது”என்றார்.