யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு குற்ற விசாரணை பிரிவு அங்கு சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
நேற்றைய சம்பவம் குறித்த அந்த பிரிவு முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அங்குள்ள நிலமைகளை நேரடியாக ஆய்வு செய்யவும், உரிய பணிப்புரைகளை விடுக்கவும் காவல்துறை மா அதிபர் நேற்று இரவு யாழ்ப்பணம் சென்றுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் எதிர்ப்பார்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 130 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இவர்களின் 36 உந்துருளிகளும் 27 ஈருருளிகளும் இரண்டு முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியான 17 வயதான வித்தியா கடந்த வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடாநாட்டில் தொடர்ச்சியாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று யாழ்;ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்தநிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திலும் ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்ற நிலையில், அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் நீதிமன்ற கட்டதொகுதிக்கு கல்லெறி தாக்குதலை மேற்கொண்ட நிலையில், கண்ணாடிகள் பல உடைந்து நொருங்கின.
ஆர்ப்பட்டகாரர்களை கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
சம்பவத்தில் 5 காவல்துறையினர் காயமடைந்தனர் என காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள குற்ற விசாரணை பிரிவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பாடசாலை மாணவி கொலைசெய்யப்பட்டமை ஒரு பழி வாங்கல் நடவடிக்கையென தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவியின் தாய் வழக்கொன்றில் தமக்கு எதிராக சாட்சியளித்துள்ளதாகவும் , இதற்கு பழிவாங்கும் முகமாகவே இக்கொலையை புரிந்ததாக மேற்படி வழக்கின் சந்தேகநபர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.