ஐந்தாவது முறையாக இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) பதவியேற்கும் தகுதியை பெற்றுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி, பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சியான லிகுட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் புளூ மற்றும் வெள்ளைக் கூட்டணி மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்நிலையில் மொத்த வாக்குகளை கணக்கிட்டபோது, இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் நெதன்யாகுவின் கட்சிக்கு வலது சாரிகளும், மதம் சார்ந்த பின்னணி கொண்ட கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதில் மொத்தமுள்ள 120 இடங்களில், 65 இடங்களில் நெதன்யாகுவின் லுகுட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியைப் கைப்பற்றியுள்ளன.
இந்த தேர்தலின் பிரகாரம் 5-வது முறையாக இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்கவுள்ளார். மேலும் இஸ்ரேலின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையும் பெஞ்சமின் நெதன்யாகு படைத்துள்ளார்.