நடிகை நித்யா மேனன் திமிர் பிடித்தவர் எனவும் அவரை மலையாளத் திரையுலகத்தில் நடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று 'மல்லுவூட்' தயாரிப்பாளர்கள் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்திருக்கின்றார் நித்யா மேனன்.
மலையாளத்து திரைப்படமான "தற்சமயம் ஒரு பெண்குட்டி" என்ற படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கேரளாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அந்தப் படத்தின் நாயகியான நடிகை நித்யா மேனனை சந்திக்க வந்த தயாரிப்பாளர்களை அவர் சந்திக்க மறுத்துவிட்டதாக சர்ச்சை ஒன்று ஏற்பட்டிருந்தது.
ஆனால், தாம் சந்திக்க வருவதாக எவ்வித முற்கூட்டியே அறிவிப்பும் இல்லாமல் திடீரென தயாரிப்பாளர்கள் வந்திருந்த நிலையிலேயே நடிகை நித்யா மேனன் அவர்களை சந்திக்க முடியாமல் போனதாகவும், அதனை அவமதிப்பாக முடிவு செய்த தயாரிப்பாளர்கள் நடிகை நித்யா மேனனுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்றும் நித்யா மேனனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை நித்யா மேனன், கிளம்பியிருக்கும் இந்த சர்ச்சை தொடர்பில் விளக்கமளிக்கையில் " தயாரிப்பாளர்களை அவமதித்தேன் என்ற குற்றச்சாட்டு கூறப்படும் இந்த சம்பவம் நடைபெற்ற நாளில் தான் எனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்து இருந்தது. அப்போது அவருக்கு புற்றுநோய் மூன்றாம் நிலையை எட்டிஇருந்தது. அதன் காரணமாக, படப்பிடிப்பின்போதே நான் கேரவனுக்குள் நுழைந்து எனது தாயின் நிலையை நினைத்து அழுதேன். அதனால் ஒற்றைத் தலைவலியாலும் பாதிக்கப்பட்டதோடு, எவருடனும் கதைக்கும் மனநிலையிலும் இருந்திருக்கவில்லை.
இவ்வாறான என்னுடைய தனிப்பட்ட காரணங்களால் முன்னறிவிப்பு இன்றி சந்திக்க வந்திருந்த தயாரிப்பாளர்களை என்னால் சந்திக்க முடியவில்லை. அதற்காக, தயாரிப்பாளர்கள் இதுபோன்ற ஏதேனும் அச்சுறுத்தல்கள் விடுப்பார்களானால் அவ்வாறான அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளவோ, பயப்படவோ மாட்டேன். என்னுடைய வேலை எதுவோ அதனை சிறப்பாக செய்வதில் மட்டுமே எனது கவனம் இருக்கும்" என்கிறார் நித்யா மேனன்.