சினிமாவுக்குள் நுழைந்து 17 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு, தான் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக, நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு, துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ் அடுத்தடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடித்ததுடன், மக்களின் அதிகரித்த வரவேற்பையும் பெற்றுக் கொண்டார்.
குறிப்பாக ''தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், ஆடுகளம், 3, மரியான், வேலையில்லா பட்டதாரி, கொடி, வட சென்னை'' போன்ற படங்கள், நடிகர் தனுஷுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
சினிமாவில் வெறுமனே நடிகராக மட்டுமல்லாது, ஒரு பாடகராக தயாரிப்பாளராக உருவெடுத்த பெருமையும் இவரையே சாரும். இந்த நிலையில் தமது சினிமா பயணத்தில் 17 ஆண்டுகள் பூர்த்தியானதை அடுத்து, ரசிகர்கள் பலர் வாழ்த்துமழை பொழிந்தமை தனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
''அன்பு மட்டுமே உலகை உருவாக்குகிறது. நடிகராக தாக்குப்பிடிக்க முடியுமா என்ற நிலையில் இருந்த எனக்கு, மிகப்பெரும் இடமளித்து எனது வெற்றி, தோல்வியில் அருகிலேயே இருந்த உங்களுக்கு எனது மனதின் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என நடிகர் தனுஷ் நெகிழ்வுடன் கூறியுள்ளார்.