முன்னாள் பிரபல முன்னணி நட்சத்திரமான 'நடிகையர் திலகம்' சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் பெரும் வரவேற்பையும், பலரது பாராட்டையும் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சிவகார்த்திகேயனின் ஜோடியாக "ரஜினி முருகன்" திரைப்படத்தின் மூலம் முன்னணி நட்சத்திரமாக மின்ன ஆரம்பித்திருந்தாலும், கீர்த்தி சுரேஷ் தமிழில் "இது என்ன மாயம்" திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் முன்னணி அந்தஸ்த்துப்பெற்ற நடிகையானதுடன், வசூல் நாயகர்களான 'தளபதி' விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகி தமிழ்த் திரையுலகில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
நிலை இப்படியிருக்க, "நடிகையர் திலகம்" திரைப்படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்தமைக்குக் கிடைத்த அதீத வரவேற்பின் காரணமாக சந்தோஷத்தில் திளைத்துத் திக்குமுக்காடிப் போன கீர்த்தி சுரேஷ், தனது அடுத்த படத்தை தேர்வு செய்ய காலம் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வரின் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைக்கருவில் அமைந்த புதிய படமொன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
நாயகிக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதுடன், கூட நடிப்பதற்கான கதாநாயகன் பாத்திரம் இந்தப் படத்தில் இல்லவே இல்லை என்கின்றார்கள் படம் தொடர்பான விஷயம் அறிந்தவர்கள். இதன் காரணமாக, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் இப்போதெல்லாம் கதாநாயகர்களுடன் டூயட் பாடி ஜோடி போடத் தயக்கம் காட்டுகின்றார் என்று புரளியை கிளப்பி விட்டுள்ளனர் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு வேண்டாதவர்கள்.