திரையுலகப் பிரபலங்களாக உள்ள பலரும் பொதுச் சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதில் முன்னிற்பது தெரிந்த விடையம். அதிலும், சில நடிகைகள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது, கல்வி வளர்ச்சிக்கு உதவுவது போன்ற விடையங்களுக்காக தாம் உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை செலவிடுவார்கள்.
உழைக்கும் வருமானத்தில் தன்னிறைவு காணாத சில பெருமனது படைத்த பிரபலங்கள், தமது நேரத்தை ஒதுக்கி தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வர். இவ்வாறு தமது நேரத்தை செலவு செய்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை நிலையங்களுடன் சேர்ந்து பணியாற்றும் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால்.
சென்னையில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் உலக பட்டினி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அண்மையில் கடும் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வின் ஏற்பாட்டுக்கு குழுவினரின் விசேட அழைப்பில் நடிகை சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டிருந்ததுடன், குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, ஊட்டி விட்டு அவர்களை சந்தோஷப்பட வைத்துத் தானும் மகிழ்ந்ததோடு ஒரு சில கருத்துக்களையும் பொதுவெளியில் பகிர்ந்திருந்தார்.
குறித்த விழாவில் சாக்ஷி அகர்வால் பேசுகையில், "உலகில் நிறைய பேர் பசியால் இறந்து போகிறார்கள். உலக பட்டினி தினத்தை இந்த உலகத்திலுள்ள எவருமே நினைத்துப் பார்க்க, இப்படி ஒரு தினமே இல்லாத நிலையை எல்லோருமாக இணைந்து நாம் ஏற்படுத்த வேண்டும். எப்படியென்றால், நாம் ஒவ்வொருவரும் பசியில் வாடும் இரண்டு குழந்தைகளுக்கு அன்றாடம் உணவு கொடுத்தால் போதும். பசி என்ற வார்த்தையை இந்த உலகில் இல்லாமல் செய்து விடலாம்" என்று நிஜத்தை போட்டுடைத்தார் இந்த திரையழகி.